கோவை: `இசை, நடனம்... விளையாட்டு' - ஆர்.எஸ்.புரத்தில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்...
ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ்; அதிகரிக்கப் போகும் 2 பிரச்னைகள் - எச்சரிக்கும் ஆய்வு!
மனித ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதை இரண்டு வருடங்களுக்கு முன்பே ஆய்வு ஒன்று தெரிவித்தது. அந்த ஆய்வறிக்கை மிகப்பெரிய அதிர்வலைகளை அந்த நேரத்தில் ஏற்படுத்தியது. மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் என்பவை ஐந்து மில்லி மீட்டருக்கும் குறைவான அளவை கொண்டவை. மைக்ரோ பிளாஸ்டிக்குகள் ரத்தத்தில் கலக்காமல் மலத்தில் வெளியேறிவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தோம். பிறகு அது ரத்தத்திலும் கலக்கும் என்பதும் கண்டறிப்பட்டது. என்றாலும், அது மனிதர்களுக்கு என்னவிதமான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பது தெரியாமல் இருந்த நிலையில், மனித ரத்தத்தில் 89% நுண்ணிய பிளாஸ்டிக் துண்டுகள் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
தென் கொரியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், 36 நபர்களிடமிருந்து சேகரித்த ரத்த மாதிரிகளில் மிக நுண்ணிய பிளாஸ்டிக் துண்டுகள் இருப்பதாகவும், இது ரத்த உறையாமை, உடல் உறுப்புகளில் வீக்கத்தை ஏற்படுத்துவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் இதய பிரச்னைகள், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் என்கிறது அந்த ஆராய்ச்சி.
மைக்ரோ பிளாஸ்டிக் என்றால் என்ன?
5 மில்லி மீட்டருக்கும் குறைவாக உள்ள பிளாஸ்டிக் துகள்களே மைக்ரோ பிளாஸ்டிக் என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக பிளாஸ்டிக் கழிவுகள் சிதைவதால் உருவாகிறது. நமது அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் கோப்பைகள், கண்டெய்னர்கள், உணவுப் பொருள்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் கவர்கள், டிபன் பாக்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது பிளாஸ்டிக் துகள்கள் நம் உணவில் கலக்கப்படுகிறது.
இதய நோயும் பக்கவாதமும்...
ரத்தம் உறைவதற்கு உதவி செய்யும் ஃபைப்ரினோஜன் (Fibrinogen) என்கிற புரதம், நமது உடலில் காயம்பட்ட இடங்களில் வீக்கம் ஏற்படாமல் இருப்பதற்கும் உதவுகிறது. ஆனால், இந்த ஆராய்ச்சியில், பரிசோதிக்கப்பட்டவர்கள் உடலில் அதிகப்படியான வீக்கம் ஏற்படுவதை கண்டுபிடித்திருக்கிறார்கள். விளைவு, அடிபட்டால் ரத்தம் உறையாது, கூடவே இதய நோய்கள், பக்கவாதம் என வாழ்வியல் நோய்களையும் ஏற்படுத்தி விடும். பரிசோதனையின் முடிவுகள் எச்சரிக்கையை காட்டும் வகையில் இருந்தாலும் இன்னும் என்னென்ன உடல் உபாதைகள் ஏற்படும் என்பதற்கான ஆய்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் நமது வாழ்வில் ஒவ்வொரு மூலையிலும் ஊடுருவி விட்டது. ரத்தத்தில் மட்டுமல்லாது, வருங்காலத்தில் உமிழ்நீர், சளி, நுரையீரல், கல்லீரல், தாய்ப்பால், கழிவு என அனைத்திலும் காணப்படும் என அந்த ஆய்வு கூறுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பூமியை மட்டுமல்ல, நம்மையும் பாதுகாக்க வேண்டுமென்றால், அதன் பயன்பாட்டை குறைப்பதுதான் ஒரே வழி என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...