Periods: பீரியட்ஸ் வலி ஏன் வருகிறது? ; அந்த வலியை வராமல் தடுக்க முடியுமா? | சந்தேகங்களும் தீர்வும்!
1. பீரியட்ஸ் வலி ஏன் வருகிறது?
மாதவிடாய் நேரத்தில் நம்முடைய கருப்பையானது சுருங்கி, விரிந்து தனக்குள் இருக்கிற உதிரத்தை வெளியேற்ற ஆரம்பிக்கும். இந்த நிகழ்வு 3 முதல் 5 நாள்கள் வரை நிகழும். கருப்பைச் சுருங்கி விரிவதில் இரண்டு விதங்கள் இருக்கின்றன. ஒன்று, மாதவிடாய் நேரத்தில் அளவுக்கு அதிகமாகச் சுருங்கி விரியும். அல்லது சுருங்கி விரிகிற வேலையைச் சரியாக செய்யாது. இதுதான் பீரியட்ஸ் வலிக்கான காரணம். இப்படியில்லாமல் கருப்பை சரியாகச் சுருங்கி விரிய ஆரம்பித்தவுடன் சீரான ரத்தப்போக்கு நிகழ ஆரம்பித்துவிடும். சீரான ரத்தப்போக்கு வந்தவுடனே பீரியட்ஸ் வலியும் படிப்படியாக குறைந்துவிடும்.
2. யாருக்கெல்லாம் பீரியட்ஸ் வலி வரும்?
வாயுத்தொல்லை இருப்பவர்களுக்கு மாதவிடாய் வலி அதிகமாகத்தான் இருக்கும். உடம்பில் ரத்த அளவு சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். நீங்கள் அனீமிக்காக இருந்தால்கூட, மாதவிடாய் ரத்தம் சீராக வெளியேற முடியாமல் வலி வரலாம்.
3. இந்த வலியை வராமல் தடுக்க முடியுமா?
உடம்பில் வாயு சேராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை நிறையச் சாப்பிடுங்கள். வாயுவை வெளியேற்றுகிற பவன முக்தாசனம், சஸங்காசனம் இரண்டையும் ஒரு யோகா நிபுணரிடம் கற்றுக்கொண்டு செய்யுங்கள். பீரியட்ஸ் நாள்களில் உடல் உஷ்ணம் தணிக்க ஒரு டம்ளர் மோரில் ஒரு டீஸ்பூன் வெந்தயப்பொடியைக் கலந்து குடியுங்கள். பீரியட்ஸ் வலியை வராமல் தடுத்து விடலாம்.
4. ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகுமா?
ஹார்மோன் சீரற்று இருப்பதுதான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கான காரணம். இதைச் சரி செய்ய சில யோகா இருக்கின்றன. நான், சுலபமான தீர்வு ஒன்றை சொல்கிறேன். 100 கிராம் பனைவெல்லத்தை அடுப்பில் வைத்து இளக்குங்கள். இதனுடன் ஒரு முழுப் பூண்டை தோலுரித்துப் போட்டுக் கிளறுங்கள். பிறகு 50 கிராம் பொடித்த கருஞ்சீரகத்தைப் போட்டுக் கிளறுங்கள். கலவை இறுக்கமான லேகியம் பதத்துக்கு வந்ததும், ஆறவிட்டு, அரை நெல்லிக்காய் அளவுக்குச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இதைச் தினமும் சாப்பிட்டு வந்தாலும், சில மாதங்களில் ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். நிறையத் தண்ணீர் குடிப்பதும் மாதவிடாய் சீராவதற்கான ஒரு வழிதான்.
5. சடங்காகும் பெண் குழந்தைகளுக்கு முதலில் எத்தனை நாள் மாதவிடாய் நிகழும்... அது எப்போது ஒழுங்குக்கு வரும்?
மாதவிடாய் நிகழும் நாள் கணக்கு சிறுமிக்குச் சிறுமி வேறுபடும். பொதுவாகச் சொல்லவேண்டுமென்றால், குறைந்தபட்சம் 10 நாள்கள் நிகழும். சில சிறுமிகளுக்கு தொடர்ந்து 15 நாள்கள் நிகழலாம். சிலருக்கு ஒரு மாதவிடாய் முடிந்த 15 நாளிலேயே அடுத்தது வந்துவிடலாம். ஹார்மோன்கள் சீராகி 28 அல்லது 30 நாள்களுக்கு ஒருமுறை பீரியட்ஸ் வர ஆறு மாதங்கள் ஆகும்.
6. மாதவிடாய் நேரத்தில் காய்ச்சல் மாத்திரை எடுக்கலாமா?
மாதவிடாயின்போது கருப்பை சுருங்கி விரியும். அப்படிச் சுருங்கி விரியும்போது பெண்களின் உடலில் உஷ்ணம் அதிகமாகும். இந்த நேரத்தில் உடல் கதகதப்பாக இருப்பதை, பல பெண்கள், 'உடம்பு சுடுது; ஃபீவர் வந்துடுச்சு' என்று நினைத்துக்கொண்டு ஏதோவொரு காய்ச்சல் மாத்திரையைச் சாப்பிட்டு விடுகிறார்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? காய்ச்சல் மாத்திரைகளுக்கு வலியைக் குறைக்கிற தன்மையும் இருக்கிறது. அதனால், உடல் சட்டென்று வியர்த்து உஷ்ணம் குறைவதோடு, மாதவிடாய் நேரத்து வலியையும் உடனே குறைக்கும். பல இளம்பெண்கள், 'ஆஹா... காய்ச்சல் மாத்திரைப் போட்டால் பீரியட்ஸ் வலி குறைகிறதே' என்று இந்தப் பழக்கத்தை மாதந்தோறும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதன் விளைவுகள் என்னென்ன தெரியுமா? பின்னாளில் கருப்பையில் நீர்க்கட்டி வருவதில் ஆரம்பித்து, நார்க்கட்டி, குழந்தையின்மை என்று பிரச்னைகள் வரிசைக்கட்டி நிற்க ஆரம்பிக்கும்.
7. பீரியட்ஸ் முதல் நாள் தலைக்கு குளிக்கச் சொல்வது சூடு காரணமாகவா... அதற்கும் மாதவிடாய்க்கும் சம்பந்தம் உண்டா?
நிறையச் சம்பந்தமிருக்கிறது. பீரியட்ஸ் நேரத்தில் உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். நம் உடலில் உஷ்ணத்தைச் சீராக்கும் புள்ளி தலை உச்சியில் இருக்கிறது. அதனால்தான், பீரியட்ஸின் முதல் நாள் தலைக்குளிக்கச் சொல்கிறார்கள். இன்னொரு விஷயம், இந்த நேரத்தில் எண்ணெய்க்குளியல் எடுத்தால், ஹார்மோன்கள் சீராகி சரியான அளவில் ரத்தப்போக்கு நிகழ ஆரம்பிக்கும்.
8. பீரியட்ஸ் நேரத்தில் சாப்பிட வேண்டிய; சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன?
வாயுத்தொல்லை தராத, எளிமையாக ஜீரணிக்கக்கூடிய எந்த உணவுகளாக இருந்தாலும் சாப்பிடலாம். கூடவே, பழங்கள், நட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுங்கள். அதிகப் புரதம் நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ், பாட்டில் டிரிங்க்ஸ் போன்றவற்றைச் சாப்பிடாதீர்கள்.
9. மாதவிடாய் நாள்களில் அந்தரங்கப் பகுதியை தினமும் சோப் கொண்டு வாஷ் பண்ண வேண்டுமா? அது சரியா?
வஜைனாவின் மேல் பகுதியை மட்டும் சோப்பால் வாஷ் பண்ணலாம். மற்றபடி, அதன் உள்பகுதியை நாப்கின் மாற்றும்போதெல்லாம் வெறும் தண்ணீரால் சுத்தம் செய்தாலே போதும். சிலர், பீரியட்ஸ் நேர கசகசப்புத் தாங்காமல், கை நிறைய சோப்பைக் குழைத்துக்கொண்டு, வஜைனாவின் உள்ளேப்போகிற அளவுக்கு சோப்புப் போட்டு விடுவார்கள். ஒவ்வொரு மாதமும் இப்படியே செய்துவந்தால், அந்தப் பகுதியில் இருக்கிற வழுவழுப்புத்தன்மை சுத்தமாகப் போய் சருமம் வறண்டு விடும். ஒரு கட்டத்துக்கு மேல், இந்தப் பகுதியில் புண் வந்துவிட்டால், அது ஆறவே ஆறாது.
10. ரத்தத்தின் நிறத்தை வைத்து நம் உடல்நிலையைக் கணக்கிட இயலுமா?
நல்ல சிவப்பு நிறம்தான் மாதவிடாயின் சரியான நிறம். பிரவுன் கலரில் நீர் போல வெளியேறினால், கருப்பையில் அழுக்கு இருக்கிறது என்று அர்த்தம். இதற்கு, ஒரு டம்ளர் தண்ணீரில் அரை டீஸ்பூன் கருஞ்சீரகப்பொடியைச் சேர்த்து தினமும் குடித்து வந்தால், அழுக்கு நீங்கி, சிவப்பு நிறத்துக்கு மாறும்.
11. மாதவிடாய் நாள்களில் ஸ்வீட் சாப்பிடலாமா? சாப்பிட்டால் ரத்தப்போக்கு அதிகமாகும் என்று சொல்லப்படுகிறதே...
மாதவிடாய் நாள்களில் இனிப்புச் சாப்பிட்டால், ரத்தப்போக்கு அதிகமாகாது. ஆனால், இனிப்புச்சுவை மனதுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதால், அந்தச் சந்தோஷம் ரத்தப்போக்கை சுலபமாக்கிக் கொடுக்கும். இதனால், அந்த நேரத்து வலி குறைந்து சௌகரியமாக உணர்வீர்கள். இப்படி சுலபமாக ரத்தம் வெளியேறுவதைத்தான் 'பீரியட்ஸ் அதிகமா போகுது' என்று நினைத்துக்கொள்கிறார்கள்.
12. மாதவிடாயின் போது தாம்பத்தியம் நிகழலாமா? மாதவிடாய் முடிந்த எத்தனையாவது நாள் தாம்பத்தியம் நிகழலாம்?
மாதவிடாயின் போது தாம்பத்தியம் நிகழாமல் இருப்பதே நல்லது. இதைத் தாண்டி, சம்பந்தப்பட்டவர்களின் செளகர்யத்தைப் பொறுத்த விஷயம் இது. உங்களுக்கு 3 நாள் மட்டும் மாதவிடாய் வருமென்றால், அது முடிந்த 5 நாள் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாம். 5 நாள் வருமென்றால், 7 நாள் வைத்துக்கொள்ளலாம்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...