செய்திகள் :

நண்பர்களின் கழுத்தறுப்பு ஓவியங்களை தீட்டிய ரிச்சர்ட் டாட் - The Dangerous Artist-ன் கதை |My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.

'இல்லை... இவர் என்னுடைய தந்தையே இல்லை. என்னைக் கொல்ல வந்த சாத்தான். சாத்தான் தான், என் தந்தையின் உடலில் புகுந்திருக்கிறது. இந்த சாத்தானைக் கொல்லவேண்டும். இதோ, இப்போதே கொல்கிறேன்...'

மேற்படி தோன்றிய தன்னுடைய எண்ணங்களை, செயலாக மாற்றியபோது ரிச்சர்ட் டாட்டுக்கு (Richard Dadd) வயது இருபத்து ஏழு மட்டுமே. அதன் பின்னர், மீதமிருந்த தன் மொத்த வாழ்க்கையையும் அவர் மனநல விடுதியில் தான் கழித்தார்.

நூற்றாண்டைக் கடந்து, இன்றும் ஆச்சரியப்பட வைக்கும் அவருடைய ஓவியங்கள் பெரும்பாலும், மனநல விடுதியில் வரையப்பட்டதே!

யார் இந்த ரிச்சர்ட் டாட்? சொந்த தந்தையையே அவர், கொலை செய்த காரணம் என்ன? அவருக்கிருந்த மனச்சிதைவு நோய், அவருடைய ஓவியங்களில் எவ்வாறு பிரதிபலித்தது?
Richard Dadd

ரிச்சர்ட் டாட், 1817 ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் கென்ட் (Kent) நகரில் பிறந்தவர். சிறுவயதிலேயே ஓவியக்கலை மீது ஆர்வம் கொண்ட இவர், தன்னுடைய பதிமூன்றாம் வயதில் ஓவியம் வரைவதை தீவிர படுத்திக் கொண்டார். 1837 ல், லண்டனில் உள்ள ராயல் அகாடமியில் சேர்ந்த இவர், விரைவிலேயே அவர் வரைந்த ஓவியங்களின் மூலம் புகழ் பெற்றார்.

தாமஸ் பிலிப் என்பவர், ரிச்சர்ட்டை ஒரு சுற்றுப்பயணம் அழைத்துச் சென்றால், மேலும் அழகான ஓவியங்களை அவரால் வரைய முடியும் என நினைத்தார். 1842 ஆம் ஆண்டு, ஐரோப்பா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு ரிச்சர்ட்டை அழைத்துச் சென்றார் பிலிப். அங்கே தான் பிரச்னைகள் ஆரம்பித்திருக்கின்றன.

ஆம்...பயணத்தின் இறுதியில், ரிச்சர்ட்டிடம் மனரீதியாக சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.

Richard Dadd

ரிச்சர்ட், பிலிப்புடன் பேசுவதைத் தவிர்த்தார். முகத்தில் மகிழ்ச்சி இல்லை. வெறுமை மேலோங்கி இருந்தது. கவனம் சிதறியிருந்தது. ஒரு வித பதட்டமும் பயமும் அவரைச் சூழ்ந்திருந்தது. எல்லோரையும் சந்தேகப் பார்வையோடு அணுகினார். சின்ன சின்ன விஷயங்களுக்கு, அதீத கோபமடைந்தார். மொத்தத்தில், அந்தப் பயணத்திற்குப் பிறகு மொத்தமாக மாறிப்போயிருந்தார் ரிச்சர்ட்.

ஊர் திரும்பிய ரிச்சர்ட்டுக்கு, மனநோய் தீவிரமடைந்தது. தன்னைச் சுற்றியிருக்கும் எல்லோரும், தனக்குத் தீங்கு செய்வதாக அவர் நினைத்தார். எல்லோரும் அவரைப் பற்றியே பேசுவதாகவும், சிரிப்பதாகவும் தவறாக நினைத்துக் கொண்டார்.

நெருங்கிய நண்பர்களையே சந்தேகப்பட்டு, அவர்கள் மீது கொலைவெறியை வளர்த்துக் கொண்டார் ரிச்சர்ட். அதன் உச்சம் தான், சொந்த தந்தையையே கொலை செய்தது.

1843 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 28 ஆம் நாள்.

தந்தையின் உடலுக்குள் சாத்தான் புகுந்து விட்டது என்று நம்பிய ரிச்சர்ட், அவரை ஒரு பூங்காவில் வைத்து, கழுத்தறுத்து கொலை செய்தார். கொலை செய்துவிட்டு தப்பியோடிய அவரை, ஃப்ரான்ஸில் வைத்து கைது செய்தனர் காவலர்கள். ரிச்சர்ட்டிடம் விசாரணை செய்ததில், அவர் அதீத மனச்சிதைவில் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

'தந்தையை ஏன் கொன்றாய்?' என்ற கேள்விக்கு, ரிச்சர்ட் சொன்ன காரணங்கள் இவை: 

'அவர் என் தந்தை இல்லை. அது ஒரு சாத்தன். அதைக் கொல்லச் சொல்லி ஒசிரிஸிடம் (ஒசிரிஸ் - Orisis என்பவர் ஓர் எகிப்தியக் கடவுள்) இருந்து எனக்கு ஆணை வந்தது. எனவே தான் அதைக் கொன்றேன்'.

ரிச்சர்ட்டின் வீட்டை சோதனை செய்ததில், பல கழுத்தறுப்பு ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அத்தனை ஓவியங்களிலும் ரிச்சர்ட்டின் நண்பர்களின் முகங்கள் இருந்தது தான்!

Richard Dadd

ரிச்சர்ட்டுக்கு சீசோபெர்னியா (Schizophrenia) எனும் மனச்சிதைவு நோய் இருந்திருந்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் (அவர் வாழ்ந்த காலத்தில், 'Schizophrenia' என்கிற வார்த்தையே கண்டுபிடிக்கப்படவில்லை).

ரிச்சர்ட்டின் உடன்பிறந்த சகோதரர்கள் இரண்டு பேருக்கும், இதே போன்ற மனநோய் இருந்திருக்கிறது. 

ரிச்சர்ட், லண்டனின் புகழ்பெற்ற மனநல மருத்துவமனையான, பெத்லம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1843 முதல் 1864 வரை, மொத்தம் இருபது ஆண்டுகள் அங்கே இருந்தார் ரிச்சர்ட்.

பின்னர், ப்ராட்மூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ப்ராட்மூர் மருத்துவமனையில் தான், சாகும் வரை வாழ்க்கையைக் கழித்தார் ரிச்சர்ட்!

இந்த இரண்டு மருத்துவமனைகளும், தொடர்ந்து அவர் ஓவியம் வரைய ஊக்குவித்தது. அவருக்குத் தேவையான பொருட்களை வழங்கியது. குறிப்பாக பெத்லம் மருத்துவமனையின் இயக்குனர் சார்லஸ் ஹுட், ரிச்சர்ட்டின் ஓவியங்களை வெகுவாகப் பாராட்டினார். 

*

ரிச்சர்ட் டாட் வரைந்த ஓவியங்களுள் முக்கியமானவை,'The Fairy Feller's Master- Stroke'.

இந்த ஓவியத்தை வரைய அவர் எடுத்துக் கொண்ட காலம், கிட்டத்தட்ட பத்து வருடங்கள் (1855 - 1864). பெத்லம் மருத்துவமனையில் இருந்தபோது இதை அவர் வரைந்திருக்கிறார். இருபதுக்கும் மேற்பட்ட மனிதர்கள், இந்த ஓவியத்தில் இருக்கிறார்கள். ரிச்சர்ட்டுக்கு இருந்த மனச்சிதைவின் வெளிப்பாடாகவே இந்த ஓவியம் பார்க்கப்படுகிறது. 

சீசோபெர்னியாவால் பாதிக்கப்படுபவர்கள், தங்களைச் சுற்றி புதிய உலகம் ஒன்றை உருவாக்கிக்கொள்வர். அவ்வுலகில் வாழும் மனிதர்கள் எல்லோரும், சந்தேகத்திற்கு உட்பட்டவர்களே! யார் வேண்டுமானாலும், எப்போதும் வேண்டுமானாலும் சாத்தானாக உருமாறலாம். எனவே எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

The Fairy Feller's Master- Stroke

'The Fairy Feller's Master- Stroke' ஓவியம், அப்படிப்பட்ட ஒரு தனி உலகத்தைத் தான் குறிக்கிறது. அது, ரிச்சர்ட்டின் உலகம். ஓவியத்தை மேலோட்டமாகப் பார்த்தால், ஒன்றும் புரியாது. உன்னிப்பாக கவனித்தால், ரிச்சர்ட்டுக்கு இருந்த மனச்சிதைவின் ஆழம் புலப்படும். 

கோடாரியுடன் நிற்கும் மனிதனைப் பாருங்கள். அவன் ஏதோ ஒரு ஆணைக்காக காத்திருக்கிறான். இது, ஒசிரிஸின் ஆணைக்காக ரிச்சர்ட் காத்திருப்பது போலவே இருக்கிறது. ஆங்காங்கே சிலர் ஒளிந்து கொண்டு உளவு பார்க்கிறார்கள். ரிச்சர்ட்டுக்கு இருந்த சந்தேக நோயின் வெளிப்பாடே இது. சிலர், பதட்டமும் பயமும் ஒன்றுசேர்ந்து ஒருவித மிரட்சியுடன் காணப்படுகின்றனர். ரிச்சர்ட்டின் குழப்பமான மனநிலையை அது குறிக்கிறது.

ரிச்சர்ட்டின் இன்னொரு புகழ்பெற்ற ஓவியம், 'Agony Raving Maddness'. மிகவும் களைப்புடன், முகத்தில் ஒளியின்றி, தலையில் கை வைத்தபடி, சங்கிலியுடன் பிணைந்திருக்கும் உருவத்தைப் பார்க்கும்போது, அக்காலத்தில் மனநோய் எவ்வாறு அணுக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதுவும் அவர் பெத்லம் மருத்துவமனையில் இருந்தபோது வரையப்பட்டது தான்.

Portrait of a Young Man

'The Fairy Feller's Master- Stroke' ஓவியத்தை, பத்து வருடங்களாக வரைந்திருக்கிறார் என்றால், அந்த பத்து வருடங்களும் தீராத மனநோயுடன் இருந்திருக்கிறார் என்பதே பொருள். ரிச்சர்ட்டின் அதிகாரப் பூர்வ மருத்துவ அறிக்கைகளும் அதைத் தான் சொல்கின்றன. 

மருத்துவமனையில், 'The Dangerous Artist' என்ற பெயரே‌ இறுதி வரையில் அவருக்கு இருந்திருக்கிறது. தன்னுடைய அறுபத்து எட்டு வயதில் உடல்நலம் குன்றி அவர் இறக்கும் வரையிலும், அவருக்கிருந்த மனநோயானது குணமாகவே‌ இல்லை. 'தந்தையைக் கொலை செய்துவிட்டோமே...' என ஒருநாளும் அவர் குற்ற உணர்ச்சிக்கு ஆளானதில்லை.‌ அவர், அவர் உலகத்தோடு மட்டுமே வாழ்ந்திருக்கிறார்.

*

'கலையும் மனநலமும்' என்கிற தலைப்பு, எப்போதுமே விவாதம் செய்யப்படும் ஒன்று. மனச்சிதைவால் தான் இது போன்ற கலைஞர்கள், தங்களுடையத் திறமையை முழுமையாக வெளிப்படுத்துகிறார்கள் என்கின்றனர் சிலர். சிலரோ, ஒருவன் மனச்சிதைவில் இருக்கும்போது எப்படி அவனால் ஒரு கலையைக் கையாள முடியும் என்கின்றனர்.

ரிச்சர்ட் டாட்டின் வாழ்க்கையைப் பற்றி வாசிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

-சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Tamils in Pakistan: பாகிஸ்தானில் வாழும் தமிழர்கள் பற்றி தெரியுமா? - வியக்கவைக்கும் வரலாறு!

உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானிலும் சிறு அளவில் தமிழ் மக்கள் வாழ்வது நம்மில் பலருக்கும் அதிசயமாக இருக்கும்.ஆதிதமிழன் பாகிஸ்தானிலும் வசிக்கிறான். பாகிஸ... மேலும் பார்க்க

நிறம், நடை, உடை... பூர்வகுடிகளால் கொல்லப்பட்ட ஜேம்ஸ் குக்; வரலாறு உணர்த்தும் உண்மைகள்| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க