செய்திகள் :

BB Tamil 8 Day 70: பின்னடைவைத் தந்ததா காதல்; கேப்டனாகத் தடுமாறும் ரஞ்சித்; தப்பித்த இருவர்

post image
டாப் 5-ல் வந்திருக்கக்கூடிய அளவிற்கு திறமையான ஆட்டக்காரராக தன் ஸ்கோரைத் துவங்கிய தர்ஷிகா இன்று வெளியேறியிருக்கிறார். அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது காதலா?

‘ஒண்ணும் புரியலே. எங்கயோ மிஸ் பண்றேன்’ என்கிற ரஞ்சித்தும் பவித்ராவும் இன்னமும் பத்திரமாக உள்ளே இருக்கிறார்கள். அவர்களை தக்க வைத்திருப்பது அதிர்ஷ்டமா? 

இது பிக் பாஸ் வீட்டிற்கான நிலைமை மட்டுமல்ல. உலக நியதியும் கூட. தகுதியான நபர்கள் அமர்ந்திருக்க வேண்டிய இடங்களில் தகுதியற்ற ஆசாமிகள் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் அவலம் எப்போதும் உள்ளது. 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 70


“விளையாடுங்கன்னு ஒரு வாய்ப்பு கொடுத்தா .. கய்யா.. முய்யான்னு கத்தறது. சண்டை போடறது.. வாரம் முழுக்க வன்மத்தை வெச்சிக்கிட்டு வாரக்கடைசில சமாதானம் ஆகறதுன்னு இருக்காங்க. ரஞ்சித் கேப்டன்சி பத்தி என்ன சொல்றது.. அவர் பதவியேத்து பேசி முடிக்கறதுக்குள்ள மூணு முட்டையையும் எடுத்திருக்கலாம்” என்கிற கிண்டலுடன் வீட்டிற்குள் நுழைந்தார் விஜய் சேதுபதி. 

BBTAMIL 8: DAY 70

‘பேச வாய்ப்பு கிடைக்கலைன்னு புலம்பறீங்க.. பேச வேண்டிய இடத்துல பேச மாட்டேன்றீங்க’ என்று முந்தைய எபிசோடில் விமர்சனம் பெற்ற பவித்ரா, இப்போது தனது போக்கை மாற்றிக்கொண்டு உற்சாக மோடில் இருக்க முடிவு செய்து விட்டார். ‘கூலா இருக்கீங்க சார்’ என்று தானாக முந்திக் கொண்டு விசேவை அவர் பாராட்ட ‘அம்பாளா பேசினாள்?’ என்கிற பராசக்தி வசனம் போல “யாரு.. பேசியது.. பவித்ராவா.. அடடே!’ என்று மகிழ்ந்தார் விசே.  “அப்ப உங்க கிட்ட இருந்தே ஆரம்பிச்சிடலாம். பாட்டம் 7-ல அதிக வாக்குகள் பெற்ற நபர்ல?” என்று பவித்ராவை வைத்து விசாரணையை ஆரம்பித்தார். 


“நான் வளர்ந்த விதமா.. என் இயல்பா.. என்னன்னு தெரியல. நானும் யோசிக்கறேன்.. இனிமே வெளிப்படையா பேசறேன்” என்று பவித்ரா உறுதி தரவும் அவரை அமர்த்தி விட்டு அவரை விடவும் அதிக வாக்குகள் பெற்ற சீனியரான ரஞ்சித்தை எழுப்பினார். “நேத்திக்கு அடிக்க ஆரம்பிச்சது.. இன்னமும் முடியலையா?” என்கிற முகபாவத்துடன் பாவமாக எழுந்த ரஞ்சித் ‘எங்கயோ மிஸ் ஆகுது.. என் மேலயே வருத்தமா இருக்கு” என்று பரிதாபமாகச் சொன்னார். 

செயலற்ற கேப்டன் ரஞ்சித்தை வறுத்தெடுத்த போட்டியாளர்கள்

‘கேப்டன் யாருன்றதையே நாங்க மறந்துட்டோம்.. முட்டையை யாரும் எடுக்கக்கூடாதுன்றதுலதான் அவர் கவனமா இருந்தார். அதுக்காக வருத்தப்பட்டார். கோபப்பட்டார்… ஆனா கேப்டன் பொறுப்பில் இருக்கவில்லை’ என்றெல்லாம் சரமாரியாக ரஞ்சித் மீது புகார்கள் வந்தன. “ஒரு கேப்டனா அவர்தான் எங்களை வழிநடத்தணும்.. ஆனா நாங்கதான் கேப்டனை வழிநடத்தற மாதிரி ஆயிடுச்சு” என்று ரைமிங்கில் சொன்னார் மஞ்சரி. “வணக்கத்துக்குரியவராக பார்க்கப்பட வேண்டிய கேப்டனை பரிதாபத்துக்குரியவரா பார்க்க வெச்சிட்டார்” என்று அசத்தினார் முத்து.

மற்றவர்கள் மென்று முழுங்கி சொதப்பும் போது தெளிவாகவும் கோர்வையாகவும் வசீகரமான வார்த்தைகளாலும் முத்து, மஞ்சரி, ஆனந்தி போன்றவர்கள் பேசும் போது ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. Communication Skill என்பது அவசியம்தான். ஆனால் இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. 

BBTAMIL 8: DAY 70

மற்றவர்கள் சாதாரணமாக சொல்லும் அதே வாக்கியங்களை ‘மானே.. தேனே..’ போட்டு அடுக்குமொழியில் பேசி இது போன்ற பேச்சாளர்கள் கவர்ந்து விடுகிறார்கள். இதற்காகவே ரூம் போட்டு யோசிப்பார்கள் போலிருக்கிறது. மொழியை வசீகரமாகப் பயன்படுத்துவது அவசியம்தான். ஆனால் மொழியலங்காரத்தில் எப்போதுமே மயங்காமல் அதில் ஆதாரமான உண்மையிருக்கிறதா என்பதைத்தான்  முதலில் ஆராய வேண்டும். கம்யூனிகேஷன் வசதிகளே இல்லாத காலக்கட்டத்தில் தேசம் முழுவதும் அறியப்பட்ட தலைவராக காந்தி இருந்தார். பல கோடி மக்கள் அவருடைய சொல்லை தன்னிச்சையாகப் பின்பற்றினார்கள். ஏனெனில் காந்தியின் சொற்களில் இருந்தது அலங்காரம் இல்லை. எளிமையும் நேர்மையும். 

கூட்டை விட்டு பறந்தால்தான் பரந்த வானத்தின் அழகு தெரியும்


‘பீஸூ பீஸா கிழிக்கும் போது ஏசு போல முகத்தைப் பாரு’ மோடில் சாத்வீகமாக அமர்ந்திருந்தார் ரஞ்சித். சக போட்டியாளர்கள் ரஞ்சித்தின் மீது சொன்ன புகார்களை மீண்டும் இங்கே பதிவு செய்வதில் எந்த உபயோகமும் இல்லை. நூறு நாட்கள் கடந்தாலும்கூட ரஞ்சித் இப்படித்தான் இருப்பார். இது அவரது அடிப்படையான இயல்பு. அதை மீறி அவரால் செயல்படவே முடியாது. நடிக்கிறார் என்றார் ஆகச்சிறந்த நடிப்பு இதுதான். அவர் எப்போதாவது கோபப்படுவதை பெரிய தவறாக சொல்லமுடியாது. ரஞ்சித்தை மேலும் தங்க வைத்து தொடர்ந்து வறுத்தெடுப்பதை விடவும் வெளியே அனுப்பி விடுவதுதான் அவருக்கும் நல்லது. ஆட்டத்திற்கும் நல்லது. 

ரஞ்சித் விஷயத்தை பொதுவாக வைத்துப் பார்ப்போம்.  ‘இதுதான் என் இயல்பு’ என்று சொல்லி ஒரு கூட்டுக்குள் நம்மை நாமே அடைத்துக் கொள்ள முடியாது. ஒரு விஷயத்தைச் செய்ய முடியுமா என்று நமக்குள்ளேயே பெரிய தயக்கமும் பயமும் இருக்கும். அந்த மனத்தடையை தாண்டவே முடியாமல் அதை முயற்சிக்காமலேயே இருப்போம். ஆனால் யாராவது உள்ளே தள்ளி விடும் போது நீச்சல் கற்றுக் கொள்வது போல ஆரம்பத்தில் தத்தளித்து பிறகு எப்படியோ அந்தப் போக்கிற்குள் கலந்து விடுவோம். ‘நாமா இதைச் செய்து முடித்தோம்?’ என்று நமக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்தத் துணிச்சல் பல புதிய கதவுகளைத் திறக்கும். 

BBTAMIL 8: DAY 70

அந்த வகையில் ரஞ்சித்தும் தனது கூட்டிலிருந்து வெளியே வந்து இயல்பான போக்கில் சிலவற்றை முயன்று பார்க்கலாம். பள்ளி டாஸ்க்கில் prank-ன் போது உச்சமான கோபத்தில் கத்துவதைப் போல் நடித்தார்.  அது போல, சுற்றிலும் அத்தனை கூச்சலும் குழப்பமும் நடந்து கொண்டிருந்த போது கேப்டன் என்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சித்திருக்கலாம். ஆனால் அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபடவேயில்லை. 

“இப்ப கடைசியா என்னதான் சார் சொல்றீங்க?” என்று விசே கேட்க “நான் வருத்தப்படறேன். வேதனைப்படறேன். வெக்கப்படறேன்” என்கிற மாதிரி ரஞ்சித் பரிதாபமாக நிற்க “இந்தப் பதில் எனக்கு பத்தலை சார்.. இதையேதான் வேற வேற வார்த்தைகளில் ஒவ்வொரு வாரமும் கேட்டுட்டு வரேன். எனக்கு வேற பதில் கொடுங்க” என்று விசே அடம்பிடிக்க ரஞ்சித் மௌனமாக நின்றார். விசேவும் பதிலை எதிர்பார்த்துக் கொண்டு நின்றார். ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா.. இன்னும் இருக்கா.. என்னவோ மயக்கம்’ என்கிற பாடல் பின்னணியில் ஓடாத குறையாக காலம் நத்தை போல் நகர்ந்து கொண்டிருந்தது. ‘சார். கால் வலிக்குது.. ரொம்ப நேரமா நிக்கறேன்” என்று  ஒரு கட்டத்தில் விசே கெஞ்ச வேண்டியிருந்தது. 

தன் பிம்பம் குறித்து விசேவும் கவலைப்படுகிறாரா?


“நான் வெற்றியாளனா இருக்க நினைக்கறேன்” என்று ரஞ்சித் எதையோ சமாளிப்பாகச் சொல்ல “அதுக்கான வேலைகள் நீங்க எதுவுமே பண்ணலையே. இல்லாமயா. மத்தவங்க இவ்வளவு சொல்வாங்க.. உங்க மனசு காயப்படக்கூடாதுன்னு இத்தனை நாள் அவங்க தயங்கியிருக்காங்க.. இப்ப கொட்டிட்டாங்க. உக்காருங்க சார்” என்று அவரை அமர்த்தி விட்டு ‘ஹப்பாடா.. முடியல’ என்கிற மாதிரி பிரேக்கில் சென்றார் விசே.  

அருணைப் போல விசேவை எதிரியாகப் பார்க்காமல், “அவரு என் நல்லதுக்குத்தான் சொல்றாரு.. ஒரே பதிலை திரும்பத் திரும்ப சொல்ல முடியாதுல்ல” என்று அதை பாசிட்டிவ்வாக எடுத்துக் கொண்டார் ரஞ்சித். நல்லவேளை அவர் மாற்றுக்கருத்தாக ஏதாவது சொல்லியிருந்தால் “ரஞ்சித் சார்.. நான் என்ன சொன்னேன்னா…” என்று அசரிரீ குரல் வந்திருக்கும். 

BBTAMIL 8: DAY 70

பிரேக் முடிந்து திரும்பிய விசே “பாருங்க.. மக்களே.. எவ்வளவோ முயற்சி பண்ணேன்.. ரஞ்சித் சாரை பேச வைக்க முடியல’ என்று ஆறுதல் தேடிக் கொண்டார். ‘தான் இந்த நிகழ்ச்சியை சரியாகச் செய்கிறோமா, கமலுடைய இடத்தில் மக்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்களா என்கிற கவலை உள்ளுற விசேவிடம் இருக்கிறதா? எனவேதான் மக்களை நோக்கி “பாருங்க.. மக்களே.. என் மேல தப்பில்லை’ என்று  அடிக்கடி பதிவு செய்து கொள்கிறாரா? தான் சரியாகச் செய்தாலும் எடிட்டிங் டீம் சொதப்பி விடக்கூடும் என்பதால் அவ்வப்போது இப்படிச் சொல்லி பாதுகாப்பைத் தேடிக் கொள்கிறாரா? ‘நான் சரியாப் பண்ணலைன்னா.. என்னையும் டிரோல் பண்ணுவாங்க’ என்று நேர்மையாகப் பேசினாலும் அவருக்குள் அந்தத் தயக்கம் உறைந்திருக்கிறதா?!

“யாரு வெளிய போனா நல்லாயிருக்கும்?” என்று பார்வையாளர்களிடத்தில் அவர் கேட்க ‘விஷால் - தர்ஷிகா’ என்று கோரஸாக பதில் வர “அவங்க மேல உங்களுக்கென்ன காண்டு?” என்று கூட்டத்தை கிண்டல் செய்தார் விசே. “இதெல்லாம் தெரிஞ்சுதானே உள்ளே வராங்க?” என்று ஒரு பெண்மணி கேட்க “செலிபிரிட்டிஸ் தங்களோட பிம்பம் குறித்து கவலைப்படறாங்க.. அது இயல்புதான். ஆனா உண்மையா விளையாடினா அந்த பிம்பத்திற்கு எதுவும் ஆகாது” என்றபடி வீட்டுக்குள் சென்ற விசே, சிலர் காப்பாற்றப்பட்ட செய்தியை சுண்டல் தருவது போல வரிசையாகச் சொன்னார். இப்படி அல்லாமல் எதிர்பாராத சர்ப்ரைஸ் ஆக ஆங்காங்கே சொன்னால் நன்றாக இருக்கும். 

எழுதிச் செல்லும் விதியின் கைகள்


‘ஃபயர் மோட் ஆன் சார்” என்று புன்னகைத்த பவித்ரா காப்பாற்றப்பட்டதால் “நானும் சார்.. ஃபயர் மோட் ஆன் ” என்று சொல்லி சிரிக்க வைத்தார் சவுந்தர்யா. “கோவத்தை நாம ஆளணும்.. அது நம்ம ஆளக்கூடாது” என்று விசே அட்வைஸ் செய்ய “டன் சார்..’ என்கிற மாதிரி சவுந்தர்யா கையை உயர்த்த “இப்பல்லாம் நல்லாப் பண்ணுங்க.. ஆனா..  நான் இதை சிரிச்சிக்கிட்டே சொன்னாலும் சீரியஸா சொல்றேன்” என்று சொல்ல பயபக்தியுடனான பாவனையுடன் கேட்டுக் கொண்டார் சவுண்டு. ஆக இந்த மயிலிறகு தடவலுடன் சவுந்தர்யாவின் ‘பாயும் புலி’ சாகசத்தின் மீதான விசாரணை முடிந்து விட்டது. 

மற்றவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில் விஷால் - தர்ஷிகா மட்டுமே மீதமிருந்தார்கள். ‘யாரு போவாங்க’ என்கிற யூக விளையாட்டிற்கு பெரும்பாலோனோர் தர்ஷிகாவின் பெயரைச் சொல்ல ‘ரைட்டு.. புரிஞ்சுடுச்சி’ என்கிற மாதிரி சிரித்தார் தர்ஷிகா. அவருடைய பெயர் எவிக்ஷன் கார்டில் காட்டப்பட்டதும் விஷாலை விடவும் அதிகமாக வருந்தி அழுது கதறினார் பவித்ரா. “அப்பவே படிச்சு படிச்சு சொன்னேனே..’ என்கிற ஃபீலிங் அதில் காணப்பட்டது. 

BBTAMIL 8: DAY 70

‘எழுதிச் செல்லும் விதியின் கை’ என்கிற அற்புதமான வரி பாரசீகக் கவிஞர் உமர்கயாமிடையுது. அதை நினைவுப்படுத்துவது போல ‘விதி என்ன திட்டம் வெச்சிருக்கோன்னு தெரியல’ என்று ஆங்கிலத்தில் விஷாலின் காதில் ரகசியம் சொல்லி விட்டுச் சென்றார் தர்ஷிகா.  

“என்ன ஆச்சு..?” என்று மேடையில் விசே விசாரிக்க, நேரிடையான பதிலைச் சொல்லாமல் மழுப்பினார் தர்ஷிகா. ஆனால் வீடியோவைத் தொகுத்தவர்கள் குறும்புக்காரர்கள். விடையை அதற்குள் பொருத்தியிருந்தார்கள். வழக்கமான காட்சிகளைத் தாண்டி விஷூவும் தஷூவும் அதிகமாக ஈஷிக் கொள்ளும் காட்சிகள் ரொமான்ஸ் மோடில் சித்தரிக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்து வெட்கம் தளும்ப சிரித்தார் தர்ஷிகா. 

“வாங்கோ.. வாங்கோ. ஆஃபிஸ் ரூமிற்கு வாங்கோ”

லவ் டிராக் என்பதை சர்வைவலுக்காகத்தான் பிக் பாஸ் வீட்டில் பயன்படுத்துவார்கள். ஆனால் தர்ஷிகாவிற்கு அதுவே ஃபேக் பயர் ஆகி விட்டது. இனக்கவர்ச்சியின் கிளுகிளுப்பையும் மீறி ஆட்டத்தில் கவனம் செலுத்த அவர் உண்மையாகவே முயற்சித்தார். பேய் டாஸ்க்கில் அதற்கான முயற்சியைப் பார்த்திருக்கலாம். ஆனால் அதையும் மீறி காதல் என்கிற மயக்கம் அவருக்குள் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. மூன்றாம் சீசனின் கவின் - லோஸ்லியா  போல இவர்களின் லவ் டிராக் பார்ப்பதற்கு ரசிக்கும்படியாகவும் இல்லை என்பது முக்கியமான காரணம். 

‘மிஸ் யூ’ என்று சக போட்டியாளர்களிடம் விடைபெற்றார் தர்ஷிகா.  ‘i dont miss you.. இருங்க.. அவங்களை அனுப்பிச்சிட்டு கொஞ்ச நேரத்துல வரேன்’ என்றார் விசே. மறுபடியும் வீட்டுக்குள் வந்தவர் “உங்க ஒவ்வொருத்தர் கிட்டயும் தனியாப் பேச விரும்பறேன்.. விருப்பம் இருக்கறவங்க கன்ஃபெஷன் ரூமிற்கு வாங்க” என்று அழைத்தார். அருண் மட்டும் தயங்கியதைப் போல் இருந்தது. 

BBTAMIL 8: DAY 70

ஒவ்வொருவரையும் அழைத்த விசே “இன்னமும் அஞ்சு வாரங்கள்தான் இருக்கு. உங்க திட்டம் என்ன?” என்று விசாரித்து பாசிட்டிவ்வான வார்த்தைகளைச் சொல்லி அனுப்பினார். அருண், ரஞ்சித் போன்றவர்களுக்கு தாங்கள் எப்படி வெளியே தெரிகிறோம் என்கிற கவலை. ‘ஊசி போட்ட மாதிரி வெளில போறேன் சார்’ என்ற ஜெப்ரி, பின்னந்தொடையை தடவிக் கொண்டே சென்ற காட்சியைப் பார்த்து ரசித்து சிரித்தார் விசே. 

முத்து வரும் போது கைத்தட்டல் கேட்டது. ‘நிறைய பதட்டமா இருக்கு. ஆனா எப்பவும் உழைப்பைப் பற்றியே யோசிக்கிறேன்” என்று டைட்டிலை ஜெயிக்கும் உத்வேகத்துடன் பேசிய  முத்துவிடம் “நீங்க நல்லா ஆடறீங்க. ஆனா அளவா பேசுங்க” என்று அட்வைஸ் செய்தார் விசே. தீபக் மற்றும் மஞ்சரியிடம் “சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல. நல்லாத்தான் விளையாடறீங்க. அதே டிராக்ல போங்க” என்று ஊக்கம் தந்தார். பங்காளி வீட்டுக்கு வருவது போன்ற தயக்கத்துடன் வந்த அருணிடம் “பழசயெல்லாம் மறந்துடுங்க” என்று எல்லாக் கோட்டையும் அழித்து அனுப்பினார். 

‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன.. ஏன் அவசரம்?’ என்கிற பாடலின் பாணியில் ‘சார்.. இன்னமும் ஏதாவது பேசுங்க.. மத்தவங்களுக்கெல்லாம் நிறைய நேரம் பேசினது மாதிரி இருந்தது” என்று காதலியிடம் கெஞ்சுவதைப் போன்ற ரயானின் கோரிக்கை சுவாரசியமாக இருந்தது.  இதே போல் “உங்க கிட்ட பேசிட்டே இருக்கலாம் போலிருக்கு” என்று ஐஸ் வைத்த சவுந்தர்யாவிடம் “உங்களுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க.. பாருங்க.. எவ்வளவு கைத்தட்டல்.. நீங்க வெளியே வரும் போது தெரியும்” என்றார் விசே “அப்ப நீங்க.. சார்?” என்று சவுண்டு சூப்பராக ஒரு பிட்டைப் போட ‘நான் எல்லோருக்கும் ஃபேன்” என்று சாமர்த்தியமாக நழுவினார் விசே. 

BBTAMIL 8: DAY 70

மொழி அலங்காரத்தைப் பார்த்து எப்படி மயங்கக்கூடாதோ, அப்படியே புற அழகையும் பார்த்து மயங்கக்கூடாது. சவுந்தர்யா வெள்ளந்தியாக செய்யும் சில விஷயங்கள் க்யூட்டாக இருக்கின்றன என்பதில் மறுப்பில்லை. ஆனால் அது மட்டும்தான் வெற்றிக்கான அளவுகோலா? இதர விஷயங்களிலும் சவுந்தர்யா தன்னை மேம்படுத்திக் கொண்டால் முன்னணி வரிசைக்கு நகர்வார். 

ஆக… வீட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்னமும் சுருங்கியிருக்கிறது. சுமாரான ஆட்டக்காரர்களும் அடுத்தடுத்து வெளியேறினால் ஆட்டத்தின் அடர்த்தியும் சுவாரசியமும் அதிகமாகும் என்று நம்புவோம். சமீபத்திய நிலவரத்தின்படி அடுத்த வாரத்தின் கேப்டனாக விஷால் தேர்வாகியிருக்கிறார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். 

BB Tamil 8 Day 69: மீண்டும் மீண்டும் கண்கலங்கிய பவித்ரா, உரையாடலில் மல்லுக்கட்டிய விசேவும் அருணும்!

லேபர் என்கிற Term சரியா தவறா என்று அருணிற்கும் விஜய் சேதுபதிக்கும் நடந்த விவாதம் சற்று நீளமாகவும் இழுவையாகவும் சென்றாலும் அது முக்கியமானது என்று நினைக்கிறேன். ஒரு விஷயத்தில் தான் கன்வின்ஸ் ஆகாத வரைக்க... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: மீண்டும் டபுள் எவிக்‌ஷன்; ஆனால்… ஒரு ட்விஸ்டை அரங்கேற்றிய பிக்பாஸ்!

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 எழுபது நாட்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. பதினெட்டுப் போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி. சில வாரங்களுக்குப் பின் வைல்டு ... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 68: சவுண்டு கொளுத்திப் போட்ட பட்டாசு; `ஜெப்ரி நடிக்கறார்ப்பா' - அம்பலப்படுத்திய சூரி

`நாமினேஷன் ஃப்ரீ பாஸ்’ ஜெப்ரிக்கு கிடைத்ததைப் போன்ற அபத்தம் வேறு எதுவுமே இருக்க முடியாது. நிர்வாகம் - தொழிலாளர் டாஸ்க்கில் ஜெப்ரி எங்குமே தெரியவில்லை. ஒருவருக்கு அனுதாபம் காட்டி வெற்றியை பரிசளிப்பதென்... மேலும் பார்க்க

`மீண்டும் ஒருவரை நம்பவும், என்னை நானே நேசிக்கவும்..!' - கணவர் வெற்றி வசந்த் குறித்து வைஷ்ணவி

`சிறகடிக்க ஆசை' வெற்றி வசந்திற்கும், `பொன்னி' வைஷ்ணவிக்கும் பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் பிசியாக அவரவர் தொடர்களில் நடித்துக் கொண... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 67: கண்ணீர் விட்ட சவுந்தர்யா; அருண் டார்ச்சர் குறித்து அனத்திய முத்து

இந்த எபிசோடில் எனக்குப் பிடித்த காட்சி என்னவென்றால் ‘இத்துடன் டாஸ்க் நிறைவு பெறுகிறது’ என்று பிக் பாஸ் அறிவித்ததுதான். போட்டியாளர்களைப் போலவே நாமும் ‘ஹப்பாடா’ என்று ஆனந்தக்கூச்சல் போடுமளவிற்கு அத்தனை ... மேலும் பார்க்க