நேபாளம், திபெத் நிலநடுக்கம்: பலி 126 ஆக உயர்வு!
நேபாளம், திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளம் - திபெத் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சீன எல்லைக்குள்பட்ட திபெத் - நேபாளம் எல்லைப் பகுதியில் இன்று காலை 6.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக் கோலில் 6.8 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
சீனாவில் திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள ஜிகாஸில் உள்ள டிங்ரி கௌண்டியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் மற்றும் இந்தியாவின் தேசிய பூகம்ப மையம் ஆகியவை ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் சீனா ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகவே பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராக்களில் கட்டடங்கள், வீடுகள், சாலையோர மின்கம்பங்கள் குலுங்கும் விடியோ காட்சிகள் பதிவாகி இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளான பூடான் மற்றும் இந்தியாவிலும் உணரப்பட்டது.
1950 ஆம் ஆண்டு முதல், லாசா பிளாக் என்றழைக்கப்படும் நேபாள - திபெத் எல்லையில், ரிக்டர் அளவுகோளில் 6-க்கு மேல் 21 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அதில், 2017 ஆம் ஆண்டில் மெயின்லிங்கில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமே இன்று வரை மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாகப் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.