யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்!
நடிகை ஹனி ரோஸ் பாலியல் புகார்: தொழிலதிபர் கைது!
கொச்சி : மலையாள நடிகை ஹனி ரோஸ் அளித்துள்ள பாலியல் புகாரரின் அடிப்படையில் தொழிலதிபர் பாபி செம்மானூர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்னைக் குறிவைத்து சமூக வலைதளங்களில் பாலியல் ரீதியாக ஆபாசப் பதிவுகள் பதிவேற்றி களங்கப்படுத்தியதாக ஹனி ரோஸ் கடந்த திங்கள்கிழமை 30 பேரை குறிப்பிட்டுப் புகார் அளித்திருந்தார்.
கண்ணூரில் நடைபெற்ற நகைக்கடை திறப்புவிழா ஒன்றில் தான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கச் சென்றிந்தபோது, அங்கு வருகை தந்திருந்த பாபி செம்மானூர், தன்னை அவமதிக்கும் விதத்தில் அநாகரிகமாகப் பேசியதாக புகார் அளித்துள்ளார். அதேபோல, மற்றுமொரு நிகழ்ச்சியிலும், பாபி செம்மானூர் இதே பாணியில் பேசிய நிலையில், அவருடைய அநாகரிகமான பேச்சுக்கு பதிலடியாக அந்த தருணத்தில் தான் சபை நாகரிகம் கருதி எவ்விதத்திலும் பதிலளிக்கவில்லை” என்று கூறியுள்ளார் ஹனி ரோஸ்.
இந்த நிலையில், தன் மீதான மேற்கண்ட குற்றச்சாட்டுகளை பாபி செம்மானூர் நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசியுள்ள பாபி செம்மானூர், “சுமார் 1 மாத காலத்திற்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தை குறிப்பிட்டு இப்போது அவர் ஏன் புகார் அளித்துள்ளார் எனத் தெரியவில்லை? அவரை மகாபாரதத்தில் வரும் குந்தி தேவியுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தேன். அதில் இரட்டை அர்த்தம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பாபி செம்மானூர் மீது பாரதிய நியாய சங்ஹிதா சட்டப் பிரிவு 75 (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67 (டிஜிட்டல் முறையில் ஆபாச கருத்துகளைப் பகிர்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள்) உள்பட பிணையில் விடுவிக்கப்பட முடியாத பிரிவுகளில் கொச்சி நகரக் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை(ஜன. 7) வழக்குப்பதிந்தனர்.
இதனையடுத்து, முன்ஜாமீன் கோரி பாபி செம்மானூர் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், வயநாட்டில் உள்ள் தனது எஸ்டேட்டில் தங்கியிருந்த பாபி செம்மானூர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பாலியல் புகார் குறித்து, சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விவகாரத்தில் ஹனி ரோஸுக்கு மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கம்(அம்மா) ஆதரவு தெரிவித்துள்ளது. அதேபோல திரைத்துறைக் கலைஞர்கள் பலரும் ஹனி ரோஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.