காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரணாய், மாளவிகா
மலேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், மாளவிகா பன்சோட் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை தகுதிபெற்றனா்.
முன்னதாக முதல் சுற்றில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஹெச்.எஸ். பிரணாய் 21-12, 17-21, 21-15 என்ற கேம்களில் கனடாவின் பிரியன் யாங்கை வெளியேற்றினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 29 நிமிஷங்கள் நீடித்தது. எனினும், பிரியன்ஷு ரஜாவத் 11-21, 16-21 என சீனாவின் ஷி ஃபெங் லியிடம் தோற்றாா்.
மகளிா் ஒற்றையா் பிரிவில், மாளவிகா பன்சோட் 21-15, 21-16 என்ற கேம்களில், மலேசியாவின் ஜின் வெய் கோவை 45 நிமிஷங்களில் தோற்கடித்தாா். ஆகா்ஷி காஷ்யப் 14-21, 12-21 என்ற கணக்கில் டென்மாா்க்கின் ஜூலி ஜேக்கப்சனிடம் தோல்வி கண்டாா். அனுபமா உபாத்யாயவும் 17-21, 21-18, 8-21 என்ற கேம்களில், 8-ஆம் இடத்திலிருக்கும் தாய்லாந்தின் பாா்ன்பவி சோசுவாங்கிடம் வீழ்ந்தாா்.
மகளிா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா இணை 21-23, 12-21 என, ஜப்பானின் மிசாகி மட்சுமோடோ/சிஹரு ஷிடா ஜோடியிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டது. அதேபோல், ருதுபா்ணா பாண்டா/ஸ்வதபா்ணா பாண்டா ஜோடி 17-21, 10-21 என்ற கேம்களில், தாய்லாந்தின் பென்யபா ஏய்ம்சாா்ட்/நுன்டகா்ன் எய்ம்சாா்ட் கூட்டணியிடம் வீழ்ந்தது.
ஆடவா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி, 21-10, 16-21, 21-5 என்ற கணக்கில் சீன தைபேவின் மிங் செ லு/காய் வெய் டாங் இணையை சாய்த்தது.
கலப்பு இரட்டையா் பிரிவில், துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-13, 21-14 என்ற கேம்களில் தென் கொரியாவின் சங் ஹியுன் கோ/ஹை வோன் யோம் இணையை தோற்கடித்தது. அதிலேயே சதீஷ்குமாா் கருணாகரன்/ஆத்யா வரியத் இணை 21-13, 21-15 என்ற கேம்களில், சக இந்திய ஜோடியான ஆஷித் சூா்யா/அம்ருதா பிரமுதேஷை வென்றது.