பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு: சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
வள்ளலாரைத்தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் பற்றி அவதூறாகப் பேசியதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முன்னதாக நேற்று(புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்துக்கும் என்ன சம்மந்தம்? எனப் பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டனர். அங்கு இருந்த கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் சற்று பரபரப்பும் ஏற்பட்டது.
தொடர்ந்து புதுச்சேரியில் இன்று(வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மீண்டும் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
'முன்பு பெரியார் பற்றி தெளிவில்லாமல் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன். இப்போது தெளிவாகிவிட்டேன். தமிழ், தமிழர்களை இழிவுபடுத்தியவர் பெரியார்.
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: பவன் கல்யாண் தீட்சை செய்வாரா? - ரோஜா கேள்வி
பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? பெரியாருக்கு கொள்கை என்ற ஒன்றே இல்லை. வள்ளலாரைத்தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்? திராவிடம் என்று கூறியவர்கள் எல்லாம் திருடர்கள்.
பெரியார் பேசினார் என்றால் பரவாயில்லை. பெரியார்தான் எல்லாம் செய்தார் என்றால் எப்படி? வஉசி, இரட்டைமலை சீனிவாசன், மறைமலை அடிகள் எல்லாம் இல்லையா?' என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெரியார் குறித்த சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சை அடுத்து மோதல்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சீமானின் வீட்டிற்கு தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் செல்வதாக அறிவித்துள்ள நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.