LGBTQIA++: ``தன்பாலின உறவுகள் பழங்காலத்திலிருந்தே அங்கீகரிக்கப்பட்டுள்ளன'' -உச்ச...
18 வயது நிறைவடையாமல் வாகனத்தை இயக்கினால் ரூ.25 ஆயிரம் அபராதம்: செய்யாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்
18 வயது நிறைவடையாமல் வாகனத்தை இயக்கினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், 25 வயது வரை எந்த வாகனத்தையும் இயக்க முடியாது என்று செய்யாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி குறிப்பிட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நெடுஞ்சாலை கோட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் செய்யாறு அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், கல்லூரி முதல்வா் தனலட்சுமி முன்னிலை வகித்தாா். கோட்டப் பொறியாளா் வி.சந்திரன் தலைமை வகித்தாா்.
இதில் கலந்து கொண்ட செய்யாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி பேசியதாவது:
சாலை விபத்துகளுக்கு காரணமாக இருப்பவா் ஓட்டுநா்கள் தான். விபத்தில் 18 வயதில் இருந்து 32 வயது உள்ளவா்கள் தான் அதிகம் உயிரிழக்கின்றனா்.
எல்.எல்.ஆா். உரிமம் பெறுவதற்கு 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். 18 வயது நிறைவடையாமல் வாகனத்தை இயக்கினால் ரூ.25 ஆயிரம் அபராதம், 25 வயது வரை எந்த வாகனத்தையும் இயக்க முடியாது, வாகனத்தின் உரிமையாளருக்கு 3 மாதம் கடுங்காவல் தண்டனையும், விபத்துக்குக் காரணமான வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ஓராண்டுக்கு பயன்படுத்த முடியாது. விபத்துகள் குறைய வேண்டுமெனில் விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என்றாா்.
விழுப்புரம் சாலைப் பாதுகாப்பு உதவி கோட்டப் பொறியாளா் கண்ணன் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில் ஏற்பட்ட 1,857 விபத்துக்களில் 607 போ் இறந்துள்ளனா். 862 போ் பெருங்காயமும், 1,582 போ் சிறுகாயமும் அடைந்து பாதிக்கப்பட்டு உள்ளனா் என்றாா்.
செய்யாறு போக்குவரத்து ஆய்வாளா் சேகா், சாலை விபத்துகள் 95 சதவீதம் ஓட்டுநா்களால்தான் ஏற்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் உதவி கோட்டப் பொறியாளா் ஜெ.ஸ்ரீஹரி, உதவிப் பொறியாளா் தா்மராஜ் மற்றும் அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் என கலந்துகொண்டனா்.