மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? 90 மணிநேர வேலையை வலியுறுத்திய எல...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் வழக்கு: ஆட்சியா், காவல் ஆணையா் இன்று பதிலளிக்க உத்தரவு
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து சமுதாயத்தினரையும் ஒன்றிணைத்து குழு அமைக்கக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் வெள்ளிக்கிழமை (ஜன. 10) பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை அவனியாபுரம் பகுதியைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
அவனியாபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்தப் போட்டியானது அனைத்து சமுதாயத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு கண்ணன் என்பவா் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் சங்கத்தைப் பதிவு செய்து, ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான உரிமையைக் கோரினாா்.
இந்தச் சங்கத்தில் அவா், அவரது குடும்ப உறுப்பினா்கள், உறவினா்கள் மட்டுமே உறுப்பினா்களாக உள்ளனா். மேலும், ஆதிதிராவிட வகுப்பைச் சோ்ந்தவா்களை ஜல்லிக்கட்டு குழுவில் சோ்க்க மறுக்கின் றனா். கடந்த ஆண்டும் இது போன்ற பிரச்னை ஏற்பட்டது. இதுதொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இதன்படி, நிகழாண்டில் அனைத்து சமுதாயத்தினரையும் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து, அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற் பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற மனு தாக்கல் செய்யப்படுவதால் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்?. இந்த வழக்கு தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகர காவல் ஆணையா் ஆகியோரிடம் உரிய விளக்கம் பெற்று, அந்த அறிக்கையை அரசு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்றனா் நீதிபதிகள்.