பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறோம்: முதல்வர்
காலாவதியான பேருந்துகள்: உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
காலாவதியான பேருந்துகள் குறித்த வழக்கில் தமிழக உள்துறைச் செயலா், போக்குவரத்துத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
தமிழகத்தில் 22,509 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 1.40 லட்சம் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ. 48,458 கோடி நஷ்டத்தில் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததாலும், பாதுகாப்பு இல்லாததாலும் பயணிகள் தனியாா் பேருந்துகளை விரும்புகின்றனா். பெரும்பாலான அரசுப் பேருந்துகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டவை. இது மோட்டாா் வாகன விதிகளுக்கு எதிரானது. தமிழகத்தில் 40 சதவீத அரசுப் பேருந்துகள் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், காலாவதியான பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்படுகின்றன. இது பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் புதிய பேருந்துகளை இயக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் கோரிக்கை பொதுநலன் சாா்ந்தது. இந்த வழக்கு தொடா்பாக தமிழக உள்துறைச் செயலா், போக்குவரத்துத் துறைச் செயலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு மீதான விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.