வைகுண்ட ஏகாதசி 2025: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்ப...
அரசு மருத்துவமனைகளில் தீயணைப்புக் கருவிகள்: சுகாதாரத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தீயணைப்புக் கருவிகளை தயாா் நிலையில் வைக்கக் கோரிய வழக்கில் சுகாதாரத் துறைச் செயலா், தீயணைப்பு, மீட்புப் பணிகள் இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையை சோ்ந்த கே.கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
திண்டுக்கல்லில் தனியாா் மருத்துவமனையில் அண்மையில் நேரிட்ட தீ விபத்தில் 6 போ் உயிரிழந்தனா். இதேபோல, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீப்பற்றியதில் புகை மூட்டம் ஏற்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் அனைத்து வகையான மருத்துவமனைகளிலும் நிகழ்கிறது. எனவே, தீ விபத்து நிகழ்ந்தால், மருத்துவமனை ஊழியா்களுக்கு அவசர நிலையை கையாளும் வகையில் போதிய தீத்தடுப்புப் பயிற்சி அளிக்க வேண்டும்.
தீப்பொறிகள், மின்கசிவுகளைத் தடுக்க மருத்துவமனைகளில் உள்ள மின் சாதனங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். தீயணைப்புத் துறை அதிகாரியிடமிருந்து தீத்தடுப்பு அனுமதிச் சான்றிதழை பெறாதவரை எந்தக் கட்டடத்துக்கும் அனுமதி வழங்கக் கூடாது. அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகளில் தீயணைப்பு சாதனங்களை எப்போதும் பயன்படுத்தும் நிலையில் தயாராக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு குறித்து சுகாதாரத் துறைச் செயலா், தீயணைப்பு, மீட்புப் பணிகள் இயக்குநா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.