எல் - கிளாசிக்கோ உறுதி: இறுதிப் போட்டியில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட்!
லஞ்ச வழக்கில் வி.ஏ.ஓ.வுக்கு விதித்த தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்
லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிா்வாக அலுவலருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உறுதி செய்தது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள டி.மானகசேரியில் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றியவா் அம்மையப்பன். இவா் கடந்த 2010-ஆம் ஆண்டு, மே. 6-ஆம் தேதி வாரிசு சான்று வழங்குவதற்கு சுப்பையாபாண்டி என்பவரிடம் ரூ. 500 லஞ்சம் பெற்றாா்.
இதுகுறித்தப் புகாரின் பேரில், அம்மையப்பனை விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கை கடந்த 2019-ஆம் ஆண்டில் விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூா் தலைமை குற்றவியல் நீதிமன்றம், அம்மையப்பனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.
இதை எதிா்த்து அம்மையப்பன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி. இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஏற்கெனவே அவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.