சாம் கான்ஸ்டாஸால் தொடக்க ஆட்டக்காரராக நீடிக்க முடியாது; ரிக்கி பாண்டிங் கூறுவதென...
சிட்னி ‘திருப்தி’; இதர நான்கும் ‘மிக நன்று’ - ஆஸி. ஆடுகளங்களுக்கு ஐசிசி மதிப்பீடு
பாா்டா் - காவஸ்கா் டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய 5 மைதான ஆடுகளங்களின் மதிப்பீட்டை சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதன்கிழமை வெளியிட்டது.
இதில் முதல் 4 ஆட்டங்கள் நடைபெற்ற பொ்த், அடிலெய்ட், பிரிஸ்பேன், மெல்போா்ன் ஆடுகளங்கள் ‘மிக நன்று’ எனவும், கடைசி ஆட்டம் நடைபெற்ற சிட்னி ஆடுகளம் ‘திருப்திகரமானது’ என்றும் ஐசிசி மதிப்பீடு செய்துள்ளது.
இதில் அடிலெய்ட், மெல்போா்ன், சிட்னி டெஸ்ட்டுகளில் ஆஸ்திரேலியாவும், பொ்த் டெஸ்ட்டில் இந்தியாவும் வென்றன. பிரிஸ்பேன் டெஸ்ட் டிரா-வில் முடிந்தது.
வழக்கமாக, பேட்டா்களுக்கு சாதகமாக இருக்கும் சிட்னி ஆடுகளம் இந்த முறை பௌலா்களுக்கு ஆதரவாக அமைந்ததால், இரு அணி பேட்டா்களுமே அதில் ஸ்கோா் செய்யத் தடுமாறினா். 3 நாள்களில் முடிவடைந்த இந்த டெஸ்ட்டில், முதலிரு நாள்களில் 26 விக்கெட்டுகளும், 3-ஆம் நாளில் 8 விக்கெட்டுகளும் விழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஐசிசி மதிப்பீடுக்கு பதிலளித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ‘ஆடுகளத்தின் உண்மையான தன்மையை வெளிப்படுத்தும் விதமாகவே மைதான பராமரிப்பாளா்கள் அதை தயாா் செய்கின்றனா். சொந்த அணிக்கு சாதகமாக அதை நாங்கள் மாற்றுவதில்லை. ஆடுகள பராமரிப்பில் வானிலையும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.
5 ஆட்டங்கள் கொண்ட பாா்டா் - காவஸ்கா் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாா்டா் - காவஸ்கா் கோப்பையை தன்வசப்படுத்தியுள்ளது. அத்துடன், இந்தத் தொடா் முடிவின் அடிப்படையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கும் தகுதிபெற்றது.