செய்திகள் :

`தாள்கள் உருவாக்கிய தானைத் தலைவன்' - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 14

post image
லூயிஸ் மிஷாவ் - பெட்டி லோகன் தம்பதியினரின் மகன் லூயிக்கும் மால்கமுக்குமான நட்பு இந்த நேர்காணலுக்குத் தேவையா? அவசியமாக இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் பத்திரிகைக்கு எழுதிக் கொடுக்கும் பிரதியில் நீக்கி விடலாம்.

லூயிஸ் மிஷாவ்வும் மால்கமும் நெருங்கிய நண்பர்கள். மால்கம் X கொல்லப்பட்ட பின்பு, அவருடைய சுயசரிதை உட்பட ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் ஏதாவது அரிய தகவல்கள் கிடைக்குமென்பதால் லூயியின் அனுபவங்களைக் கேட்டேன். “எங்க கடை முன்பாக மால்கம் பேசினால் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடிவிடும். முதல் தடவையாக அவரைப் பார்த்தபோது அன்பான புன்னகையோடு ஆதுரமாக என் கைகளைப் பற்றிக் குலுக்கினார். அப்பாவும் அவரும் நண்பர்கள் என்பதைத் தாண்டி இருவரையும் இணைத்தது புத்தகங்கள்தான்.

‘என் ஆர்வத்தை திருப்திப்படுத்தும் வகையில், வாழ்நாளின் எஞ்சிய நாட்களை புத்தகங்களை வாசிப்பதில் செலவிடவே விரும்புகிறேன். ஏனென்றால் எனக்கு ஆர்வமில்லாத ஒன்று என எந்தத் துறையும் கிடையாது’ என மால்கம் அடிக்கடி எங்களிடம் சொல்லுவார். போராட்டங்களில் பேசுவதற்கு முன்பாக, மேடையில் என்ன பேசப் போகிறார் என்பதைப் பற்றி கடையின் பின்புறம் உள்ள அறையில் அப்பாவோடு அவர் விவாதிப்பார். 

“கூட்டம் கைதட்டி கைதட்டி உற்சாகப்படுத்துவதால், கைதட்டல் ஓயும் வரை மால்கம் அமைதியாக இருக்க வேண்டும். அந்தளவுக்கு மால்கமின் பேச்சை கூட்டத்தினர் ரசித்துக் கேட்பது வழக்கம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஒருமுறை அவர் கூறிய வாசகங்கள் இது: Nobody can give you freedom. Nobody can give you equality or justice or anything. If you're a man, you take it. ``உனக்கு யாரும் சுதந்திரத்தை வழங்க முடியாது. சமத்துவத்தையோ நீதியையோ அல்லது வேறு எதையுமோ யாரும் உனக்கு வழங்க முடியாது. நீ மனிதன் என்றால், அதை நீயே எடுத்துக் கொள்ள வேண்டும்" என அவர் சொன்னது இப்போதும் என் நினைவுல இருக்கு.

மேடையில் பேசும் போது மால்கமுக்கு அவருடைய அமைப்பின் தொண்டர்கள் பாதுகாப்பு வழங்குவது வழக்கம். தொண்டர் படையின் தளபதிகள் மேடையைச் சுற்றியும், உயரமான கட்டிடங்களில் நின்றும் கண்காணிப்பது வழக்கம். அது பற்றி அப்பாவிடம் கேட்டேன். மால்கம் உண்மையை உரத்து முழங்குவதால், அதனை விரும்பாதவர்களால் அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, அப்பா சொல்லுவார். அப்பா என்ன சொல்ல வருகிறார் என அப்போது எனக்கு புரியவில்லை. 

ஒரு நாள் மாலையில் நண்பர்களோடு ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அப்போ எனக்கு ஒன்பது வயசிருக்கும். அவசர அவசரமாக வந்த அப்பா, மால்கம் அங்கிள் மீட்டிங்குக்கு போறேன் உன்னை வீட்டில் விட்டுவிடுகிறேன் எனச் சொல்லி காரில் ஏற்றி வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு அவசரமாக வெளியேறினார். நான் ஹோம்ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கும் போது, ஒரு கால் வந்தது. தொலைபேசியில் பேசி முடித்து விட்டு என்னைப் பார்த்து திரும்பிய மம்மி, அழுதுகொண்டே என்னைப் பார்த்து, மால்கம் என்று சொல்லியவர் அப்படியே உறைந்து நின்றார். ‘மேடையில பேசிக் கொண்டிருக்கும் போது யாரோ அவர சுட்டுட்டாங்களாம்’ எனச் சொல்லி முடித்தவர் கைகள் இரண்டையும் விரிக்கவும் ஓடிப் போய் அவருடைய மார்பில் தஞ்சமடைந்தேன்.

“எனக்கு மூச்சு விட முடியவில்லை. அப்பா சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் அன்றுதான் விளங்கியது. மால்கம் கொல்லப்பட்ட விவரத்தை அப்பா வந்து சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. அவர் கொல்லப்படும் போது, அந்த மேடையில் மால்கம் அங்கிளோடு அப்பாவும் இருந்திருக்க வேண்டும், நல்ல வேளையாக அப்பா அந்த நிகழ்ச்சிக்கு தாமதமாக செல்ல நினைத்திருந்தார் போல… கொல்லப்பட்ட தகவல் கேட்டுத்தான் என்னைப் பாதுகாப்பாக வீட்டில் விட்டுவிட்டு சம்பவ இடத்திற்குச் சென்றிருக்கிறார். அப்பா அந்த நேரத்தில் மேடையில் இல்லையென்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் மால்கம் அங்கிள் கொல்லப்பட்டது எனக்குக் கவலையாக இருந்தது.

அன்றிரவு அப்பா தூங்காமல் இருட்டில் அழுது கொண்டிருந்தார், இதுக்கு முன்னாடி அவர் அழுது நான் பார்த்ததில்ல. எனக்கும் அழுகை வந்திடுச்சி. அடுத்த நாள் காலை என் கட்டிலுக்கு வந்த அப்பா சோகமாக இருந்தார். என் தலையை தடவிக் கொடுத்தவர், ‘மால்கம் அடிக்கடி கூறுவார்: உயிரை விடுவதற்கு தயாராக இல்லையென்றால், சுதந்திரம் என்ற வார்த்தையை உங்கள் அகராதியிலிருந்து எடுத்து விடுங்கள். அவர் சொன்ன மாதிரியே உயிரை விட்டிருக்கிறார். அவரை ஒழித்து விட்டதாக எதிரிகள் நினைக்கிறார்கள். ஆனால், மக்கள் அவரை மறக்க மாட்டார்கள் லூயி... அவருடைய வார்த்தைகள் ஒரு போதும் நம்மை விட்டும் விலகாது’. இப்படி அப்பா சொன்னதும் எனக்கு திடீர்னு ஒரு உதிப்பு ஏற்பட்டது. ஆமாம், அவருடைய வார்த்தைகள் எப்பவும் மறையாது. வார்த்தைகள் மறையாது. மக்களுக்கு எங்களுடைய புத்தகக் கடையின் தேவையை அந்தக் கணத்தில்தான் நான் உணர்ந்தேன்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல், லூயி அப்படியே நிறுத்தி விட்டான். மால்கம் கொல்லப்பட்டு பதினோறு ஆண்டுகளைக் கடந்த பின்பும், அந்தத் துயர நினைவுகளிலிருந்து அவர்கள் மீள முடியாமல் இருப்பதை அந்த அறையில் நிலவிய நிசப்தம் உணர்த்தியது. மால்கம் சுட்டுக் கொல்லப்பட்டதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. மிஷாவ்வின் குடும்பத்தினரோடும் அவருடைய புத்தகக் கடையோடும் மால்கமுக்கு இருந்த நெருக்கம் அப்படி. இன்று மால்கமின் பிறந்த தினம் அல்லவா…

“மார்கஸ் கார்வேயின் சிந்தனைகளால் ஊட்டம் பெற்று வளர்ந்தவன் நான். என்னுடைய கடைக்கு கார்வே வந்திருக்கிறார். அவர் இறந்த பின்பு அப்படி ஒரு தலைவன் கிடைப்பானா என ஏங்கி இருக்கிறேன்.” ஏதோ சிந்தனை வயப்பட்டவராக இருந்து விழித்துக் கொண்டவர்போல மெளனம் கலைத்த மிஷாவ், லூயி விட்ட இடத்திலிருந்து தொடங்கும் தொனியில் பேசினார்.

“கார்வேக்குப் பின்பு விலை போகாத, கறைபடாத கறுப்பினத் தலைவர் எவரும் இல்லை, சாதாரண கறுப்பர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய கறுப்பினத் தலைவர் எவருமில்லை அப்டின்னுதான் நான் நினைத்தேன். ஆனா, அந்த நினைப்பை தவிடு பொடியாக்கியவர் மால்கம்தான்.

“ஹார்லெம் நகரில் ரவுடியாக, போதைப் பொருள் விற்பவராக, விபச்சாரத் தரகராக, வெள்ளைக்காரனைப் போல இருக்க ஆசைப்பட்டு தலைமுடியை 'காங்க்' செய்து கொண்டு தெருப் பொறுக்கியாக, டெட்ராய்ட் ரெட் என்ற பெயரில் சுற்றித் திரிந்த காலத்திலேயே அவரை எனக்கு தெரியும். அப்போது அவர் மால்கம் X ஆகியிருக்கவில்லை. சிறை வாழ்க்கைதான் அவரை இந்த நரகத்திலிருந்து காப்பாற்றியது. இல்லை, இல்லை கல்விதான் அவரை மனிதனாக மாற்றியது, தலைவனாக உயர்த்தியது. வாசிப்பை நாட சிறை வாழ்க்கை அவருக்கு உறுதுணையாக இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

“மால்கம், சிறைச்சாலையில் இருந்த எண்ணற்ற புத்தகங்களைப் படித்திருக்கிறார். மொழி அறிவை பெருக்கிக் கொள்வதற்காக அகராதியைக்கூட கற்றிருக்கிறார். சிறையிலிருந்து விடுதலையான பின் 1954-ம் ஆண்டு வாக்கில் மால்கம், ஹார்லெம் நகருக்கு வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த பின், கறுப்பர்களின் உரிமைகளுக்காகப் போராடும் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் இணைந்து, தன்னிகரில்லா தலைவராக உயர்ந்தார். மால்கம் லிட்டில் என்ற அவருடைய பெயரில் உள்ள லிட்டில் என்பது, அவருடைய மூதாதையரை அடிமையாக வைத்திருந்த வெள்ளைக்கார எஜமானரின் பெயர். பரம்பரை பரம்பரையாக அவர்களின் குடும்பத்தில் ஒட்டிக் கொண்ட அந்தப் பெயரை வைத்துக் கொள்ள விரும்பாமல், ஆஃப்ரிக்காவிலிருந்து கடத்தியதால் தங்களின் பாரம்பரியம் துண்டிக்கப்பட்டு, மூதாதையர் யார் என்றே தெரியாத நிலையில் வெள்ளை எஜமானரின் பெயரை பின்னொட்டாக வைத்துக் கொள்ள மறுத்து, தன்னுடைய பெயருக்குப் பின் X என்ற எழுத்தை சேர்த்துக் கொண்டார் மால்கம்.

“கறுப்பர்களின் போராட்டத்தை எந்த இடத்தில் கார்வே விட்டுச் சென்றாரோ அந்த இடத்தில் இருந்து மால்கம் தொடங்கினார். மால்கம் கார்வே ஆக முடியாது, அப்படி ஆக முடியாததை ஒரு வகையில் நல்லது என்றே நான் சொல்லுவேன். கார்வேயிடம் ஒரு குறிக்கோளும் அதை அடைவதற்கான செயல்திட்டமும் இருந்தது, ஆனால் அதை எளிய கறுப்பின மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. அவருடைய செய்தி படிப்பறிவில்லாத கறுப்பர்களைச் சென்றடையவில்லை. கார்வே ஒரு படிக்கல்லாக இருந்தார், அதில் ஏறி மால்கம் அடுத்தக் கட்டத்திற்கு சென்றார். “கார்வேயின் கொள்கைகளை - கனவுகளை எளிய மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை மால்கம் கச்சிதமாக நிறைவேற்றினார். கறுப்பினத்தில் சில சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் கறுப்பர்களின் விடுதலை, முன்னேற்றம் குறித்தெல்லாம் சிந்திக்கின்றனர். ஆனால், அவர்களால் சாதாரண படிப்பறிவில்லாத கறுப்பர்களிடம், அவர்களுக்கு புரியும் மொழியில் பேசத் தெரியவில்லை. படித்தவர்களுக்கு மட்டுமே இந்தச் சிந்தனையாளர்களின் பேச்சு புரிகிறது. 

“ஒரு பயிற்சி பெற்ற - கல்வி கற்ற நீக்ரோ ‘பழக்கப்படுத்த நீக்ரோ’ ஆவார். அவர் மென்மையான, அறிவார்ந்த விஷயங்களைச் சொல்ல பயிற்சி பெற்றவர். கறுப்பர்களின் அவமானத்தைப் பற்றி சாதுர்யமாகச் சொல்லுமளவுக்கு அவர் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார். “மால்கம் X யேல் (Yale) பல்கலைக் கழகத்தில் இருந்து வரவில்லை, சிறையிலிருந்து (Jail) வெளியே வந்து தலைவராக உயர்ந்தவர். அவர் பல்கலைக் கழக அறிவு பெறாதது நல்லதுதான், பெற்றிருந்தால் அவரும் அடங்கி ஒடுங்கிப் போகும் மென்மையான தலைவராக இருந்திருப்பார்.

மால்கம் எளிமையாகப் பேசினார், சாதாரண மக்களுடன் தொடர்பில் இருந்தார், அவர்களுக்கு புரியும் மொழியில் உரையாற்றும் திறமையைக் கொடையாகப் பெற்றிருந்தார். ஃபிரடெரிக் டக்ளஸின் உத்வேகத்தை தன்னுடைய பேச்சில் மால்கம் கொண்டிருந்ததாக நான் உறுதியாக நம்புகிறேன். நானும் மால்கமும் வெவ்வேறு கருத்து நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், என்னுடைய கடையின் பின் அறையில் அமர்ந்து, எங்களுடைய பெயரையும் அடையாளத்தையும் மறந்து சுகமாகவும் சுவையாகவும் உரையாடுவோம்”

தோழராகவும் துணைவராகவும் தலைவனாகவும் இருந்த மால்கமின் நினைவுகளை தந்தையும் மகனும் உயிர்ப்போடு வைத்திருந்தனர். மிஷாவ் பேசிக் கொண்டிருக்கும் போது, அப்போது பிரபலமாக இருந்த இன்னொரு கறுப்பின தலைவரான மார்ட்டின் லூதர் கிங்கின் போராட்டங்கள் பற்றி அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மனதில் உருப் போட்டேன்.

பக்கங்கள் புரளும்

`காகித நேசம்' - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 13

அமெரிக்க கறுப்பினப் போராளி மால்கம் X பற்றிய பேச்சு எழுந்ததால், லூயிஸ் மிஷாவ்வுக்கும் மால்கமுக்குமான நெருக்கம் பற்றிய தகவல்களோடு, நேர்காணல் சுவாரஸ்யமாகப் போவதாக நினைத்தேன்.ஆனால், மிஷாவ் தன் மனைவியின் ப... மேலும் பார்க்க

கண்ணுக்குத் தெரியாதவன் கதை சொல்கிறேன்... கேட்பீர்களா?! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

நிசப்தமாக ஓர் அறிவுப் புரட்சி; மால்கம் X உடனான முரண் - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை| பகுதி 12

1930-களின் இறுதியில் தொடங்கப்பட்ட தேசிய நினைவு ஆஃப்ரிக்க புத்தகக் கடை பத்தாண்டுகளில் கற்பனைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சியைத் தொட்டது.பதிப்புத் துறையில் லூயிஸ் மிஷாவ் பேசுபொருளானதைத் தொடர்ந்து ஏராரளமான பதி... மேலும் பார்க்க

ஹென்ரிட்டா லாக்ஸ் - உயிர் நீத்து உயிர்கள் காக்கும் பெண் வள்ளல் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

பணம் சார்ந்த உளவியல் - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

Book Fair: "என் மீதான வாசகர்களின் நம்பிக்கை அதிகம்; அதனால் விலை ஒரு பொருட்டல்ல" - மனுஷ்ய புத்திரன்

இதுவரையில் 53 கவிதை தொகுப்பு, 14 கட்டுரை தொகுப்புகள் மற்றும் ஒரு நாவல் படைத்துள்ள கவிஞர் மனுஷ்ய புத்திரனின் சமீபத்திய கவிதை தொகுப்பு 'நாளை என்பது உன்னைக் காணும் நாள்'. நடைபெற்றுக்கொண்டிருக்கும் சென்னை... மேலும் பார்க்க