திமுகவினா் உற்சாகமாக தோ்தல் பணியாற்ற வேண்டும்: அமைச்சா் பி. மூா்த்தி வேண்டுகோள்
Book Fair: "என் மீதான வாசகர்களின் நம்பிக்கை அதிகம்; அதனால் விலை ஒரு பொருட்டல்ல" - மனுஷ்ய புத்திரன்
இதுவரையில் 53 கவிதை தொகுப்பு, 14 கட்டுரை தொகுப்புகள் மற்றும் ஒரு நாவல் படைத்துள்ள கவிஞர் மனுஷ்ய புத்திரனின் சமீபத்திய கவிதை தொகுப்பு 'நாளை என்பது உன்னைக் காணும் நாள்'. நடைபெற்றுக்கொண்டிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில், தனது உயிர்மை பதிப்பகத்தில் வாசகர்களைச் சந்தித்துவரும் மனுஷ்ய புத்திரனைச் சந்தித்தோம் .
'நாளை என்பது உன்னைக் காணும் நாள்' நூலிற்கு வாசகர்களிடம் கிடைக்கும் வரவேற்பு குறித்துக் கேட்டதற்கு, "வெளியீட்டு விழா முடிந்து நான்கு நாட்களே ஆவதால், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விற்பனை தொடங்கி உள்ளது. நூலின் விலை சற்றே கூடுதலாக இருக்கிறதே என்று என்னிடமே சில பேர் கேட்டார்கள்.
என்னுடைய கவிதைகளைப் படிப்பவர்கள் எல்லோருமே உள்வாங்கிப் படித்து, நீண்ட நாட்களாக என்னுடைய எழுத்தைப் பின்தொடர்பவர்களாகவே இருக்கிறார்கள். புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகத்திற்கு மட்டுமே வந்து செல்லும் வாசகர்களும் இருக்கிறார்கள் .
என்னுடைய மூன்றாவது பெரிய படைப்பு. இது பணம் சார்ந்த விஷயம் கிடையாது. கவிஞனுக்கும் வாசகனுக்கும் உள்ள தொடர்பு. அதனால் நான் பத்து ரூபாய்க்கு எழுதினாலும் படிப்பார்கள். பத்தாயிரம் ரூபாய்க்கு எழுதினாலும் படிப்பார்கள். என் வாசகர்கள் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டிலும், என் மீது வாசகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகம். அதனால் விலை ஒரு பொருட்டே அல்ல" என்றவரிடம் , இந்த ஆண்டு வாசகர்களுக்கு நீங்க பரிந்துரைக்கும் புத்தகம் என்னென்ன என்று கேட்டோம். "நான் நிறையப் படிப்பேன். அதிலிருந்து ஃபில்டர் பண்ணிச் சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும் சொல்கிறேன்" என்றவரின் பரிந்துரைகளை வரிசைப்படுத்தினார்.
1. ஷோபா சக்தி - சிறுகதை தொகுப்பு,
2. மூன்றாம் பிறை - எழுத்தாளர் மானசீகன் முதல் நாவல்,
3. வம்ச விருட்சம் - எஸ் .எல் .பைரப்பா,
4. கவிதை ரசனை - விக்கிரமாதித்தனின் தேர்வும் தொகுப்பும்.
கடந்த ஆண்டில் தங்கள் படித்ததில் பிடித்தது எந்த புத்தகம் என்று கேட்டால், "நான் நூற்றுக்கணக்கான புத்தகங்களைக் கடந்த ஆண்டு படித்துள்ளேன். நீங்க கேட்கிற மாதிரி குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், சல்மான் ருஷ்டியின் 'KNIFE' புத்தகத்தைச் சொல்லலாம்" என்று கூறினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...