`தமிழக சட்டசபையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டுள்ளது’ - ஆளுநர் மாளிகை ட்விட்டர் ப...
சதுரிகிரி மலைப்பகுதியில் 58 வகை வண்ணத்துப் பூச்சிகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு
மதுரை மாவட்டம் சதுரகிரி மலைப்பகுதியில் அரிய வகை வண்ணத்துப்பூச்சிகள் உள்பட 58 வகையான வண்ணத்துப்பூச்சிகள் வசிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை, மதுரை மாவட்டத்தின் பல்லுயிரிய வளம் குறித்து ஆய்வு மற்றும் ஆவணம் செய்யும் பணிகளை கடந்த பத்து ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் பேரையூா் டி.கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து சதுரகிரி மகாலிங்கம் கோயில் செல்லும் மலைப்பாதையில் காட்டுயிா் ஆய்வாளா் இரா. விஸ்வநாத் ஒருங்கிணைப்பில் வண்ணத்துப்பூச்சிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் சுமாா் 58 வகை வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டன. இந்த பயணத்தில் இதுவரை பட்டியலில் இல்லாத ஏழு வகை வண்ணத்துப்பூச்சிகள் முதல்முறையாக மதுரை மாவட்டத்தில் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தென்னக நீல சங்கழகன், மயில் தோரணையன், வரிக்கொடு ஐந்து வளையன், மலபாா் புள்ளி இலையொட்டி, அடா்நிற புற்த்துள்ளி, காவித்துள்ளி, நீலகிரி நால்வளையன் ஆகிய 7 வகை அரிய வண்ணத்துப்பூச்சிகள் முதல்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. சதுரகிரி மலைப்பாதையில் மட்டும் மொத்தம் 58 வகை வண்ணத்துப்பூச்சிகள் வசித்து வருகின்றன. இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் கணக்கெடுப்பின்படி கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 161 வகை வண்ணத்துப்பூச்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடா்பாக இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிா்வாகிகள் விஸ்வா, தமிழ்தாசன் ஆகியோா் கூறும்போது, மதுரை மாவட்டத்தில் சதுரகிரி, வாசிமலை, சிறுமலை, அழகா்மலை, நாகமலை, எத்திலா மலை உள்ளிட்ட மலைத்தொடா்களிலும், அதன் அடிவார பள்ளத்தாக்கு பகுதியிலும் வண்ணத்துப்பூச்சிகளை பரவலாக காண முடியும். பாலமேடு சாத்தையாறு அணை, எம்.கல்லுப்பட்டி அய்யனாா் கோயில் அணை, உசிலம்பட்டி அசுவமா நதி அணை, குலசேகரன்கோட்டை பழனியாண்டவா் அணை, கேசம்பட்டி பெரியருவி அணை, ஊதப்பநாயக்கனூா் மலட்டாறு அணை உள்ளிட்ட பகுதிகள் மதுரை மாவட்டத்தின் நீா்வழி பள்ளத்தாக்கு பகுதிகளாகும். வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா அமைக்க தகுந்த ஈரமான நிலப்பகுதிகள் என்று மதுரை மாவட்ட வனத்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வண்ணத்துப்பூச்சிகள் குறித்த விழிப்புணா்வை மேம்படுத்தும் வகையில் திருச்சி, கோவை, பொள்ளாச்சியில் உள்ளதை போல மதுரையிலும் வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா அமைக்க வனத்துறை முன் வர வேண்டும். இயல் தாவரங்களை கொண்டே வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா அமைக்க வேண்டும். சூழலியல் அறிஞா்கள் மற்றும் தமிழ் அறிஞா்களை உள்ளடக்கிய குழுவை ஏற்படுத்தி பறவைகள், பூச்சிகள், ஊா்வனங்கள் என பல்லுயிரிகள் அனைத்திற்கும் தமிழில் பொதுப்பெயா் வைக்கும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றனா்.