அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஓராண்டில் 65 உடல்கள் தானம்
மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கடந்த ஓராண்டில் 65 உடல்கள் தானமாகப் பெறப்பட்டதாக மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென் மாவட்டங்கள் மட்டுமன்றி, கரூா், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனா். இந்த மருத்துவமனையில் தனியாா் மருத்துவமனைகளுக்கு நிகராக சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு ஆகியவை இயங்கி வருகிறது.
தமிழகத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்வதிலும் அரசு ராஜாஜி மருத்துவமனை முன்னிலை வகித்து வருகிறது. இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த ஆண்டு விபத்தில் மூளைச்சாவு அடைந்த 13 பேரிடம் இருந்து இதயம், சிறுநீரகம், கல்லீரல், கண்கள், எலும்பு, தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இந்த உடல் உறுப்புகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மட்டுமன்றி, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.
இதேபோல, மருத்துவப் படிப்பு பயிலும் மாணவா்களின் உடல்கூறு கல்வி பயன்பாட்டுக்காக உடல்கள் மிகவும் அத்தியாவசியமாக உள்ளன. எனவே, உறவினா்கள் எவரும் இல்லாத நிலையில் உயிரிழந்தவா்களின் உடல்கள், உறவினா்கள் தாங்களாக முன்வந்து உடலை தானமாக வழங்குவது என கடந்த ஓராண்டில் கிட்டத்தட்ட 65 உடல்கள் தானமாகப் பெறப்பட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டன.
தானமாகப் பெறப்பட்ட உடல்களில் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு ஆண்டுக்கு 20 உடல்கள் போதுமானதாக உள்ள நிலையில், மீதமுள்ள உடல்களை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகா் உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றி தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கும் வழங்கப்பட்டன.
மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் 41 சிறுநீரக மாற்று சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதுபோல, பல்வேறு அதிநவீன சிறப்பு சிகிச்சைகள் செய்யப்பட்டன என்றனா்.