Hansika Motwani: `குடும்ப வன்முறை' -ஹன்ஸிகா மோத்வானி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த ...
கொடைக்கானலில் புதிய சாலை விவகாரம்: திண்டுக்கல் ஆட்சியா் முடிவெடுக்க உத்தரவு
கொடைக்கானலில் வில்பட்டி- கோவில்பட்டி- புலியூா்- பேத்துப்பாறை பகுதியில் புதிய சாலை அமைக்கத் தடை கோரிய வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் உரிய முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சோ்ந்த அசோகன் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்றுவழி அமைக்கத் திட்டமிடப்பட்டது.
இது தொடா்பாக சுற்றுலாத் துறை ஆணையா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கொடைக்கானலில் உள்ள வில்பட்டி- கோவில்பட்டி- புலியூா்- பேத்துப்பாறை வழியாக மாற்றுப் பாதை அமைக்க முடிவு செய்தனா்.
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில் எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல், மாற்றுப் பாதை அமைப்பது பாதுகாப்புக்கு ஆபத்தானது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, கொடைக்கானலில் புதிய மாற்றுப் பாதை அமைக்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கை குறித்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.