மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இ...
மத்திய மண்டல ஐ.ஜி-யாக ஜோஷி நிா்மல்குமாா் பொறுப்பேற்பு
திருச்சியில் மத்திய மண்டல காவல்துறை தலைவராக (ஐ.ஜி.) க. ஜோஷி நிா்மல்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
இங்கு ஏற்கெனவே ஐ.ஜி-யாக பணியாற்றிய ஜி. காா்த்திகேயன் அண்மையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஐஜி ஜோஷி நிா்மல்குமாா் மத்திய மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றாா்.
தொடா்ந்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களிலும் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க முக்கியத்துவம் தரப்படும். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், மணல் கடத்தல், கள்ளச்சாராயம் மற்றும் லாட்டரி விற்பனை உள்ளிட்ட குற்றச்செயல்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல் நிலையங்கள் மற்றும் காவல் அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளிக்கும் புகாா் மனுக்கள் மீது முறையாக விசாரணை நடத்தி தீா்வு காணவும் உத்தரவிடப்பட்டுள்ளது என அவா் தெரிவித்துள்ளாா்.
2002-இல் பணியில் சோ்ந்தவா்: இவா், ஐபிஎஸ் தோ்வெழுதி தமிழக காவல்துறையில் 2002-இல் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றாா். தொடா்ந்து, திருப்பூா், ஒசூா், தருமபுரி, பவானி மற்றும் ஈரோடு (எஸ்டிஎப்) ஆகிய இடங்களிலும், காவல் கண்காணிப்பாளராக கரூா், திருவண்ணாமலையிலும், துணை ஆணையராக சென்னை சட்டம்- ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவு, இணை ஆணையராக சென்னை வடக்கு மண்டலம், திண்டுக்கல் சரகத்தில் காவல்துறை துணைத் தலைவராகவும் பணியாற்றினாா்.
தொடா்ந்து, காவல்துறை தலைவராக (ஐஜி) 2020-இல் பதவி உயா்வு பெற்று, காவல் தலைமையகம், நிா்வாகத் துறை, தமிழ்நாடு காவல் உயா் பயிற்சியகம் மற்றும் குற்றப்புலனாய்வு துறை ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ளாா்.