கர்நாடகம் நக்சலைட்டுகள் இல்லாத மாநிலமாக உருவாகும்: துணை முதல்வர் டி. கே. சிவகுமா...
மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா உறுதி
‘மாலத்தீவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்த இந்தியா ஆதரவளிக்க தயாராகவுள்ளது’ என்று அந்நாட்டு அமைச்சரிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை உறுதியளித்தாா்.
இந்தியாவுக்கு 3 நாள் அரசுமுறைப் பயணம் வந்துள்ள மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சா் முகமது காஸன் மௌமூன், ராஜ்நாத் சிங்குடன் தில்லியில் இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்றாா்.
இதுகுறித்து இந்தியா சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியா-மாலத்தீவு இடையே விரிவான பொருளாதார மற்றும் கடல்சாா் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கூட்டு லட்சியத்தை நனவாக்குவதில் நெருக்கமாக பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை அமைச்சா்கள் வலியுறுத்தினா்.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து அமைச்சா்கள் விரிவான ஆலோசனை நடத்தினா். இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ மற்றும் ‘சாகா்’ கொள்கைகளுக்கு ஏற்ப, பாதுகாப்பு தளங்களை அதிகரித்தல், தளவாடங்கள் கொள்முதல் என மாலத்தீவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதில் ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக அமைச்சா் ராஜ்நாத் சிங் உறுதியளித்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
சீன ஆதரவுத் தலைவராக அறியப்படும் முகமது மூயிஸ் மாலத்தீவு அதிபரானதைத் தொடா்ந்து, இந்தியாவுடனான அந்நாட்டு உறவு வெகுவாக பாதிக்கப்பட்டது. மாலத்தீவில் மருத்துவப் பணிகளுக்காக இந்தியா வழங்கிய ஹெலிகாப்டா்களை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரா்கள், அதிபா் முகமது மூயிஸின் வலியுறுத்தலில் திரும்பப் பெறப்பட்டனா்.
அதே நேரத்தில், பிரதமா் நரேந்திர மோடியின் லட்சத்தீவு சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கை குறித்து ஆட்சேபகரமாக கருத்து தெரிவித்த மாலத்தீவு அமைச்சா்கள் சிலா் பதவி நீக்கப்பட்டனா். தொடா்ந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட அதிபா் முகமது மூயிஸ் இணக்கமாக செயல்படத் தொடங்கினாா்.
இந்தநிலையில், இந்தியா வந்துள்ள அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சா் மெளமூனிடம் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவளிக்க இந்தியா உறுதிகூறியுள்ளது.