தில்லி தேர்தல்: ஆம் ஆத்மிக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு!
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை தொடர்ந்து சிவசேனை(உத்தவ் அணி) கட்சியும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள், இந்த முறை தனித்தனியாக போட்டியிடுகின்றன.
இந்த நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி நிலவி வரும் சூழலில், ஆம் ஆத்மிக்கு திரிணமூல் காங்கிரஸும், சிவசேனை உத்தவ் அணியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : திருப்பதி கூட்ட நெரிசல்.. என்ன நேர்ந்தது? ரூ.25 லட்சம் இழப்பீடு!
சிவசேனை கட்சியின் செய்தித்தாள் சாமனாவில் ‘ஹரியாணா, மகாராஷ்டிரத்தை தொடர்ந்து தற்போது தில்லி’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியாகியுள்ளது.
”தில்லி ஒரு யூனியன் பிரதேசம், அங்கு துணைநிலை ஆளுநருக்கு அதிகளவில் அதிகாரம் இருக்கிறது, ஆனால், அவர் இப்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஏஜெண்ட்டாக பணியாற்றி வருகிறார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான அதிகாரத்தை திரும்பப் பெற்றுள்ளார். அவர் பாஜகவுக்காக வேலை செய்வது மிகவும் ஆபத்தானது.
வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடத்துவதாக ஆணையம் கூறினாலும், மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவான செயல்பாடுகள் நடக்கின்றன. தில்லியில் வெற்றி பெற பாஜக எந்தளவுக்கு வேண்டுமானாலும் இறங்கும், மக்கள் விழிப்புடனும் கவனமாகவும் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி உள்ளது. களத்தில் உள்ள காங்கிரஸ், பாஜகவைவிட கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மியை அதிகமாக தாக்குகின்றது. தில்லி மக்கள் இதைக் கண்டு கண்டிப்பாக ஆச்சரியப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மும்பையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஆதித்ய தாக்கரே, “தில்லிக்கு அரவிந்த் கேஜரிவால் செய்த பணிகளையும் அவர் கொண்டு வந்த மாற்றங்களையும் யாராலும் மறுக்க முடியாது” எனத் தெரிவித்தார்.