சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 பேர் சிக்கித் தவிப்பு!
சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 பேர் சிக்கினர்.
சத்தீஸ்கரில் முங்கேலியில் கட்டுமானப் பணியில் உள்ள தனியார் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் வரையில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்தைத் தொடர்ந்து, தகவல் அறிந்த காவல்துறையினரும் மீட்புக்குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அண்டை மாவட்டங்களிலிருந்து பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணியின் முதற்கட்டமாக ஆலையில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் வரையில் உயிரிழக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுவதாக அப்பகுதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.