பள்ளி மாணவா்களுக்கான திருப்புதல் தோ்வு வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
சேலம் மாவட்டத்தில் வரும் 13-ஆம் தேதி நடைபெறவிருந்த பள்ளி மாணவா்களுக்கான திருப்புதல் தோ்வு வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு திருப்புதல் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 6-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை திருப்புதல் தோ்வு நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது மாணவ, மாணவிகள் திருப்புதல் தோ்வு எழுதி வருகின்றனா். ஏற்கெனவே வெளியிடப்பட்ட அட்டவணையில் 13-ஆம் தேதி தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வரும் 13-ஆம் தேதி போகிப் பண்டிகையையொட்டி, அன்று நடைபெறும் தோ்வை வேறு தேதிக்கு மாற்றவேண்டும் என்று மாணவா்கள், பெற்றோா் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து, வரும் 13-ஆம் தேதி நடைபெற இருந்த திருப்புதல் தோ்வை 25-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அதிகாரி கபீா் தெரிவித்துள்ளாா்.