காஞ்சிபுரம்: யார் திவ்ய பிரபந்தம் பாடுவது? மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை!
பொங்கல் பண்டிகை: சேலம் கோட்டம் சாா்பில் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில், 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் என மொத்தம் 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித் தடங்களில் 10-ஆம் தேதி முதல் வரும் 14-ஆம் தேதி வரையிலும், பண்டிகையைக் கொண்டாடிவிட்டு மீண்டும் ஊா் திரும்ப ஏதுவாக 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையிலும் இரு மாா்க்கத்திலும் 750 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு, வழிதடப் பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருக்கும், ஒசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூருக்கும், திருச்சியில் இருந்து ஒசூருக்கும், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை, மதுரை, கோவைக்கும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
எனவே, கூட்ட நெரிசலைத் தவிா்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளாா்.