அடுத்த தலைமுறை தகுதியோட தான் வர்றாங்க! - Director Shankar Interview | Game Chang...
குடியரசுத் தலைவர் முதல்.. எம்எல்ஏ வரை.. மாத ஊதியம் எவ்வளவு?
புது தில்லி: ஒரு தனி மனித வாழ்க்கையில் ஊதியம் என்பது மிகவும் அத்தியாவசியமானது, அது தினக்கூலியாகவோ, மாத ஊதியமாகவோ, தொழில் லாபமாகவோ, முதலீடுகள் மூலம் கிடைக்கும் வட்டியாகவோ இருக்கலாம்.
ஆனால், ஒவ்வொரு மாதமும் அன்றாடத் தேவைகளை சமாளிக்க வேண்டும் என்றால் பணம் அவசியம். நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதை ஒருவர் நிரூபிக்க, குறைந்தபட்சம் மாதம் செல்போன் ரீசார்ஜ் செய்வதற்கு ரூ.200 தேவைப்படுகிறது. சாப்பாடு, இன்னபிற எல்லாம் பிறகுதான்.
மாத ஊதியம், ஓய்வூதியம், உதவித் தொகை மூலம் பலரும் தங்களது அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
இந்த வகையில், நாட்டில் மிக உயரிய பதவியில் இருப்பவர்களின் மாத ஊதியம் பற்றி தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, நாட்டின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படும் குடியரசுத் தலைவரின் மாத ஊதியம் ரூ.5 லட்சமாகும். இது முற்றிலும் வரி விலக்குப் பெற்றது.
குடியரசுத் துணைத் தலைவராக இருப்பவருக்கு வழங்கப்படும் மாத ஊதியம் ரூ.4 லட்சம் ஆகும். இவர்களுக்கு கூடுதலாக சில சலுகைப் படிகளும் வழங்கப்படும்.
பிரதமரின் அடிப்படை மாத ஊதியம் என்பது ரூ.2.80 லட்சமாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.1 லட்சம். இது தவிர போக்குவரத்து, தொலைபேசி என பிற படிகளும் வழங்கப்படும்.
முதல்வர்களிலேயே அதிக ஊதியம் பெறுவது தெலங்கானா முதல்வர்தான். இவருக்கு ரூ.4.10 லட்சம் ஊதியமாக வழங்கப்படுகிறது. அதற்கடுத்து ஆந்திர முதல்வருக்கு ரூ.3.35 லட்சம் ஊதியம் மற்றும் சலுகைப் படிகள் வழங்கப்படும். தமிழக முதல்வரின் ஊதியம் ரூ.2.05 லட்சமாம்.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம், வாகனம், தொலைபேசிகளுக்கான படிகளுடன் சேர்த்து ரூ.1.05 லட்சம் வழங்கப்படுகிறதாம்.
அடுத்தபடியாக, மாநில ஆளுநர்களின் மாத ஊதியம் ரூ.3.50 லட்சம் என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் மாத ஊதியம் ரூ.2.80 லட்சம் என்றும், நீதிபதிகளின் மாத ஊதியம் ரூ.2.50 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு, அவர்கள் வகிக்கும் பதவிக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் மூதல் ரூ.2.50 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், பதவிகளுக்கு ஏற்ப அரசு பங்களா, அரசு வாகனம், உதவியாளர்கள் என மேலும் சில சலுகைகளும் வழங்கப்படுகிறது.