பலமாற்று பொன் இனங்கள் மூலம் வருவாய் ஈட்டும் திட்டம் தொடரும் -அமைச்சா் பி.கே.சேகா...
Ashwin : 'இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்' - மாணவர்கள் மத்தியில் அஷ்வின் பேச்சு
சமீபத்தில் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கல்லூரி மாணவர்களிடையே பேசுகையில், 'இந்தி நம்முடைய தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்!' எனப் பேசியிருக்கிறார்.
கல்லூரி ஒன்றில் தன்னுடைய பேச்சை தொடங்கும் முன்பு மாணவர்கள் மத்தியில், 'நான் ஆங்கிலத்தில் பேச வேண்டுமா இந்தியில் பேச வேண்டுமா, தமிழில் பேச வேண்டுமா?' எனக் கேட்டுவிட்டு, 'இந்தி நம்முடைய தேசிய மொழி அல்ல, அலுவல் மொழிதான்.' எனக் கூறிவிட்டு தன்னுடைய பேச்சை தமிழிலேயே தொடர்ந்தார்.
'பொறியியல் படிக்கும்போது லேப் சம்பந்தமான விஷயங்களை நிறைவு செய்வதற்குள் படாத பாடுபட்டேன். 'நீயெல்லாம் பெயில்தாண்டா ஆவே..' என பேராசிரியர்கள் சொல்வார்கள். ஆனால், என்னுடைய வகுப்பில் நான்காண்டுகளில் அரியரே இல்லாமல் தேர்வான மாணவன் நான் மட்டும்தான். கடினமான காலங்களை பொறியியல் படிக்கும்போது எதிர்கொண்டதால்தான் என்னால் சிறந்த கிரிக்கெட்டராக உருவெடுக்க முடிந்தது. பொறியியல் படிப்புதான் எனக்கு நேரம் தவறாமையை கற்றுக்கொடுத்தது.
என்னுடைய கரியரில் நான் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்ததே இல்லை. என்னால் ஒரு விஷயத்தை செய்யவே முடியாதென யாராவது சொன்னால் அந்த விஷயத்தை நான் கட்டாயம் செய்து காட்டுவேன். என்னை இந்திய அணிக்கு கேப்டன் ஆக முடியும் என்றே பலரும் சொன்னதால்தான் அதை விட்டுவிட்டேன் என நினைக்கிறேன். எப்போதுமே மாணவனாகவே இருங்கள். அப்போதுதான் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளும் மனநிலை இருக்கும்.' என அஷ்வின் பேசியிருந்தார்.
'I have the Streets' என்ற பெயரில் அஷ்வின் தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்தில் இந்தி தெரியாததால் வட மாநிலங்களில் அவர் எவ்வளவு மன உளைச்சலுக்கு உள்ளானார் என்பதை விரிவாக எழுதியிருப்பார். அந்த அனுபவங்களுக்கு பிறகுதான் இந்தி கற்றுக்கொண்டதாகவும் கூறியிருப்பார்.