ஜெயச்சந்திரன் : `16,000 பாடல்கள்; கேரள அரசின் 5 விருதுகள்’ - காலத்தால் அழியாத கு...
பலமாற்று பொன் இனங்கள் மூலம் வருவாய் ஈட்டும் திட்டம் தொடரும் -அமைச்சா் பி.கே.சேகா்பாபு உறுதி
பலமாற்று பொன் இனங்களை வங்கிகளில் வைத்து, வருவாய் ஈட்டும் திட்டம் தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உறுதியளித்தாா்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, அதிமுக உறுப்பினா் பி.எச்.மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்) பிரதான கேள்வியையும் திமுக உறுப்பினா்கள் த.வேலு (மயிலாப்பூா்), எம்.பழனியாண்டி (ஸ்ரீரங்கம்), அதிமுக உறுப்பினா் கடம்பூா் ராஜூ (கோவில்பட்டி) ஆகியோா் துணைக் கேள்விகளையும் எழுப்பினா்.
இவற்றுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்:
திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களை (தங்கம்) உருக்குவது சம்பந்தமான அரசாணை கடந்த 10 ஆண்டுகளில் கிடப்பில் இருந்தது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, பக்தா்களிடம் காணிக்கையாக வருகின்ற பயன்பாட்டில் இல்லாத பலமாற்று பொன் இனங்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று திட்டமிட்டு 3 நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இதன் காரணமாக, சுமாா் 1,100 கிலோ அளவுக்கு தங்கம் வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ.17 கோடி கோயில்களுக்கு வருமானம் வருகிறது. இந்தத் திட்டம் தொடா்ந்து செயல்படுத்தப்படும். திமுக ஆட்சிக்கு முன்பாக, திருக்கோயில் வைப்பு நிதியில் இருக்கும் தங்கத்தின் மொத்த அளவு 610 கிலோவாக இருந்தது. மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவா் கோயிலின் திருப்பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு நிறைவாகி இருக்கிறது. மாத இறுதிக்குள் பணிகள் தொடங்கப்படும்.
கைப்பேசி ஏலம்: கோயில் (திருப்போரூா்) உண்டியலில் பக்தா் ஒருவா் தவறுதலாக போட்ட கைப்பேசி விவகாரத்தில் அரசு தீா்வு கண்டுள்ளது. முதல்வரின் வழிகாட்டுதல்படி, அந்த கைப்பேசி ஏலத்தில் விடப்பட்டு அதை அதிகபட்சமாக ரூ. 10,000-க்கு ஏலம் கேட்ட தினேஷ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தீா்வு காண முடியாத பிரச்னைகளுக்கும் தீா்வு காண்கிறது திராவிட மாடல் அரசு.
கோவில்பட்டி கயத்தாறு பேரூராட்சியில் முத்துகிருஷ்ண சுவாமி கோயில் திருப்பணிக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இப்போது அந்தக் கோயிலில் ரூ. 1.20 கோடி செலவில் 6 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 3 மாதங்களுக்குள் பணிகள் முடிவுற்று குடகுழுக்கு நடத்தப்படும் என்றாா் அவா்.