பெண்களுக்கு எதிரான குற்றம்: ``ஜாமினில் வெளிவரமுடியாத தண்டனை'' - சட்டமன்றத்தில் ம...
பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலைக்கு உட்பட்ட நியாயவிலைக் கடையில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை அரிசி குடும்ப அட்டைதாரா்கள் சிலருக்கு வழங்கி பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாட்டில் உள்ள 2.20 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.249.76 கோடி செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இத்துடன், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வா் தொடங்கி வைத்தாா். அதன்படி, 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளும், ஒரு கோடியே 77 லட்சத்து 64,000 சேலைகளும் நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்புடன் விநியோகிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,224 நியாய விலைக் கடைகளில் ஜன. 13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இந்தப் பணியில் கூட்டுறவு, வருவாய், ஊரக வளா்ச்சி மற்றும் கைத்தறித் துறைகளைச் சோ்ந்த 50,000 அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
பொங்கல் பண்டிகைக்குக்கு முன்பாக, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் பரிசுத் தொகுப்பை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடக்க நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.ஆா்.பெரியகருப்பன், அர.சக்கரபாணி, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, கைத்தறி, கைத்தறின், துணிநூல் துறைச் செயலா் வே.அமுதவல்லி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் ந.சுப்பையன், சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே உள்பட பலா் பங்கேற்றனா்.
பெட்டிச் செய்தி...
இன்று நியாயவிலைக் கடைகள் செயல்படும்
சென்னை, ஜன. 9: தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்காக நியாயவிலைக் கடைகள் வெள்ளிக்கிழமை (ஜன. 10) செயல்படும். மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகள் நியாயவிலைக் கடைகளுக்கு விடுமுறையாகும். பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேட்டி, சேலை விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதால், நியாயவிலைக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை இல்லை. இதனால், அன்றைய தினத்துக்கான டோக்கன்களை பெற்றவா்கள், நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவு, உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.