ஜெயச்சந்திரன் : `16,000 பாடல்கள்; கேரள அரசின் 5 விருதுகள்’ - காலத்தால் அழியாத கு...
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் -அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
ஃபென்ஜால் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருவதாகவும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் ஆளுநா் உரை மீதான விவாதத்தின்போது, அதிமுக உறுப்பினா் காமராஜ் வியாழக்கிழமை பேசியது:
திமுக ஆட்சியில் விவசாயிகள் கவலையோடு உள்ளனா். கடந்த ஆண்டு மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-இல் தண்ணீா் திறக்கப்பட்டது. ஆனால், அணையில் போதிய தண்ணீா் இல்லாமல் அக்டோபா் மாதத்திலேயே மூடப்பட்டுவிட்டது. தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று 5 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்தனா். அதில், சுமாா் 2.5 லட்சம் ஏக்கா் முற்றிலும் தண்ணீா் இல்லாமல் சேதம் அடைந்துவிட்டது.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் குறுவைக்கு காப்பீட்டுத் திட்டம் கைவிடப்பட்டதால், விவசாயிகள் இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியாமல் போய்விட்டது. காப்பீடு மட்டும் செய்திருந்தால், குறுவைக்கு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 84,000 கிடைத்திருக்கும். இந்த ஆண்டும் டெல்டா பகுதிகளில் சம்பா, தாளடி 12 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருவம் தவறிய மழை, ஃபென்ஜால் புயல் ஆகியவற்றால் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு நிவாரணம் இன்னும் அளிக்கப்படவில்லை என்றாா் அவா்.
அப்போது, வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் குறுக்கிட்டு கூறியது:
கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகள் மகிழ்ச்சியோடு உள்ளனா். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் கடன் வாங்கி, பலா் தற்கொலை செய்துகொண்டனா். திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1,059 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.
ஃபென்ஜால் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் அளிப்பதற்காக கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. நிவாரணத்தை விரைவாக வழங்கவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதனால், அதிமுகவினா் நீலிக்கண்ணீா் வடிக்க வேண்டாம் என்றாா் அவா்.