செய்திகள் :

Kohli : 'கோலியின் 'Fear of Failure' மனநிலைதான் பிரச்னை' - கமெண்டேட்டர் நானி எக்ஸ்க்ளூஸிவ்

post image
நானி, தமிழ் கிரிக்கெட் வர்ணனையின் மிக முக்கிய குரல். நீண்டகாலமாக கிரிக்கெட் சார்ந்தே இயங்கிக் கொண்டிருப்பவர். பார்டர் கவாஸ்கர் டிராபி முடிந்திருக்கும் சூழலில் பல்வேறு கேள்விகளுடன் அவரை பேட்டிக்காக தொடர்புகொண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு பொறுமையாகவும் விரிவாகவும் அவர் அளித்த நேர்காணல் இங்கே.
நானி

``பெர்த்தில் முதல் போட்டியை இந்தியா வென்றிருந்த போது ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியுமே பதற்றத்தில் இருந்தது. சீரிஸூம் இந்தியாவின் கையில்தான் இருந்தது. அப்படியொரு நிலையிலிருந்து இந்தியா எப்படி கோட்டை விட்டது?”

``முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியே கொஞ்சம் அலட்சிய மனநிலையில்தான் இருந்தது என நினைக்கிறேன். மேலும், இந்திய அணி 12 ஆண்டுகள் கழித்து உள்ளூரில் ஒரு தொடரை இழந்துவிட்டு வந்திருந்தது. இதனால் இந்திய அணியை அவ்வளவு வலுவாக நினைக்கவில்லை. அதுபோக ஆஸ்திரேலிய அணியின் வீரர்களுமே ஃபார்மில் இல்லாமல்தான் இருந்தனர். லபுஷேன் 16 இன்னிங்ஸாக அடிக்கவில்லை. ஸ்மித் 10 இன்னிங்ஸாக அடிக்கவில்லை. வார்னர் இல்லாத இடத்தில் மெக்ஸ்வீனி என்கிற அறிமுக வீரரை இறக்கினார்கள். மிட்செல் மார்ஷ் டி20 ப்ளேயராக மட்டுமே இருந்தார். இதெல்லாம் ஆஸ்திரேலியாவுக்கு பிரச்சனையாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேல் அந்தப் போட்டியை இந்தியாவுக்கு வென்று கொடுத்தது பும்ராதான். அவரின் மேஜிக்கால்தான் பெர்த் போட்டியை வென்றோம். அந்த முதல் போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியினர் சுதாரித்துவிட்டனர்.”

Ravichandran Ashwin

``அஷ்வின் திடீரென ஓய்வு முடிவை அறிவித்திருந்தாரே?”

``யாருடைய முடிவைப் பற்றியும் நாம் கருத்து சொல்ல முடியாது. அது அவர்களின் விருப்பம். ஆனால், நீங்கள் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் பல வீரர்களின் கரியர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தோடு முடிந்திருக்கிறது. தோனியை கூட எடுத்துக் கொள்ளுங்களேன். ஆஸ்திரேலியாவில் வைத்து தொடருக்கு இடையிலேயேதான் தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அஷ்வின் ஜாம்பவான் வீரர். 537 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அவர் செய்யாத சாதனைகளே இல்லை. அவர் ஒரு சாதாரண பயணியை போல ஆஸ்திரேலியாவுக்கு சென்று பெவிலியனில் உட்காந்திருக்க விரும்பமாட்டார். அணியின் வெற்றியில் பங்களிக்க நினைப்பார். ஆனால், அஷ்வினுக்கு பதில் வாஷிங்டன் சுந்தரையும் ஜடேஜாவையும் அணிக்குள் எடுக்க நினைக்கிறார்கள். இந்த ஆஸ்திரேலிய தொடரை விட்டால் அடுத்து இங்கிலாந்து சுற்றுப்பயணம்தான். அதற்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது.

அங்கும் ஒரு ஸ்பின்னரைத்தான் லெவனில் எடுக்க நினைத்தால் ஜடேஜாவைத்தான் எடுப்பார்கள். அதனால்தான் அஷ்வின் இப்போதே ஓய்வை அறிவித்துவிட்டார் என நினைக்கிறேன்.”

``வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் அஷ்வின் மாதிரியான ஜாம்பவான் வீரரை சரியாக பயன்படுத்திக் கொள்ள இந்திய அணி தவறிவிட்டதோ?”

``வெளிநாடுகளை பொறுத்தவரைக்கும் அஷ்வினை ஒரு முன் தீர்மானத்துடனேயே அணுகினர். வெளிநாட்டு மைதானங்கள் என்றால் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் எடுபடுவார்கள். அஷ்வின் இங்கே தேவையில்லை என்றே நினைத்தனர். ஆனால், அஷ்வின் இதையெல்லாம் கடந்தவர். ஒரு திறமையான ஸ்பின்னரால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானங்களில் கூட நன்றாக வீச முடியும். அஷ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்திருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விக்கெட்டுகளை எடுத்து கொடுத்திருக்கிறார். கடந்த முறை சிட்னி டெஸ்ட்டில் அவர் ஆடிய ஆட்டத்தினால்தான் இந்திய அணி தொடரையே வெல்ல முடிந்தது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மட்டும் அஷ்வினை எடுத்திருந்தால் இந்திய அணி கட்டாயம் வென்றிருக்கும். ஆனால், வெளிநாடு என்றாலே ஒரே ஒரு ஸ்பின்னரோடுதான் ஆட வேண்டும் என்ற கணக்கில் ஜடேஜாவை எடுத்துவிடுவார்கள். ஜடேஜாவை அவரின் பௌலிங்கிற்காக எடுப்பதில்லை.

Ashwin

கூடுதலாக அவரிடம் இருக்கும் பேட்டிங்கிற்காகவும் பீல்டிங்கிற்காகவும்தான் எடுக்கிறார்கள். இவர்களின் முன் தீர்மானம் தவறானது. ஆஸ்திரேலிய மைதானங்களில் வீசிதானே ஷேன் வார்னே அவ்வளவு பெரிய ஜாம்பவான் எனும் நிலையை எட்டினார். அஷ்வினை நம்பி வாய்ப்பு கொடுத்தால் அணிக்காக ஆகச்சிறந்த செயல்பாட்டை எப்போதும் கொடுப்பார். துரதிஷ்டவமாக எந்த கேப்டனும் அஷ்வினுக்கு உறுதுணையாக நிற்கவில்லை.”

``பும்ரா கேப்டனாக ஒரு போட்டியை வென்று கொடுத்தார். ரோஹித்தால் அதை கூட செய்ய முடியவில்லையே. ஒரு பேட்டராகவும் சொதப்பிக் கொண்டிருக்கிறார். அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்கிற விமர்சனங்கள் எழுந்திருக்கிறதே?”

``பெர்த் டெஸ்ட் போட்டியை பும்ராவின் கேப்டன்சியால் வென்றோமா அல்லது அவரின் செயல்பாட்டால் வென்றோமா என்பதை பார்க்க வேண்டும். பும்ரா ஒரு கேப்டனாக எடுத்த முடிவுகளை விட தனிப்பட்ட முறையில் அவரின் செயல்பாடுதான் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது. ரோஹித் கேப்டனாக மீண்டும் இரண்டாவது போட்டியில் உள்ளே வந்தவுடன், பும்ரா ஒரு போட்டியை வென்று கொடுத்துவிட்டார் என்கிற அழுத்தமும் அவர் மீது தொற்றிக் கொண்டது. அதுபோக தனிப்பட்ட முறையில் அவரும் சிறப்பாக ஆடவில்லை. ரோஹித் அதிரடியாக ஆடி தொடக்கத்தில் நல்ல மொமண்டம் கொடுக்கக்கூடியவர். அவரின் எதாவது ஒன்றிரண்டு இன்னிங்ஸ்கள் அப்படி அமைந்திருந்தால் கூட அணிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கும். ஆனால், ஒரு சில தோல்விகளால் ரோஹித்தை அணியிலிருந்து நீக்க வேண்டும் என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.”

``ரோஹித்தின் எதிர்காலம்தான் என்ன?”

``ஜாம்பவான் வீரர்களுக்கு அவர்கள் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது தெரியும். டி20 போட்டியிலிருந்து கோலியும் ரோஹித்தும் ஓய்வு பெறுவார்கள் என யாருமே நினைக்கவில்லை. அப்படியொரு சமயத்தில் இருவரும் ஓய்வை அறிவித்தார்கள். அதனால் எப்போது அணியிலிருந்து விலக வேண்டும் என்பது இருவருக்கும் தெரியும். அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி, ஐ.பி.எல் போன்ற தொடர்கள் வருகிறது. அதில் சிறப்பாக ஆடும்பட்சத்தில் இருவரின் மீதான இப்போதைய பிம்பம் அப்படியே முழுமையாக மாறிவிடும். அவர்கள் இருவருமே 100% உறுதியாக கம்பேக் கொடுப்பார்கள்.”

Rohit Sharma

``ரன் எடுக்காமல் அவுட் ஆவதை கடந்து, எப்படி அவுட் ஆகிறோம் என்பது முக்கியம். கோலி இந்தத் தொடர் முழுவதும் ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளுக்கு பேட்டை விட்டு அவுட் ஆகியிருக்கிறார். அவரின் பிரச்னைதான் என்ன?”

``கோலியிடம் டெக்னிக்கலாக எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை. அவரின் மனநிலையில்தான் பிரச்னை. அவுட் சைடு ஆப் ஸ்டம்பாக வீசினாலே தவறிழைத்து விடுவோ என்பது அவர் மனதில் பதிந்திருக்கிறது. இதற்கு முன்னால் ஒரு இங்கிலாந்து தொடரில் கூட ஆண்டர்சனுக்கு எதிராக கோலி இப்படி ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை துரத்தி சென்று அவுட் ஆகியிருப்பார். ஆனால், அங்கே கூட ஆண்டர்சன் கோலிக்கு ட்ரைவ் ஆடும் லெந்தில் வீசிதான் விக்கெட்டை எடுத்திருப்பார். இப்போதோ எந்த லெந்த்தில் வீசினாலும் ஆப் சைடுக்கு வெளியே என்றாலே கோலி அவுட் ஆகி விடுகிறார். இதற்கு அவரின் 'Fear of Failure' மனநிலைதான் காரணம். அது மாறினாலே எல்லாம் சரியாகிவிடும். பேடி அப்டன் போன்று மனநல ஆரோக்கியம் சார்ந்து இயங்குபவர்கள் கோலிக்கு உதவக்கூடும். அடுத்து வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபியும் ஐ.பி.எல் லும் கோலி பார்முக்கு திரும்ப முக்கியமான தொடர்களாக இருக்கும். ஏனெனில், அது ஒயிட் பால் கிரிக்கெட். அங்கே இப்படி அவுட் சைட் ஆப் ஸ்டம்பில் வீசி கோலியை அடிக்கடி அவுட் ஆக்க முடியாது. அதற்கான சூழல் அந்தத் தொடர்களில் இருக்காது. அதைப் பயன்படுத்தி கோலி ரன்களை சேர்க்க வேண்டும். சதங்களை அடிக்க வேண்டும். அப்போது கோலியின் இந்த 'Fear of Failure' மனநிலை மாறக்கூடும்.”

``பயங்கர எதிர்பார்ப்புகளுடன் கம்பீர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றிருந்தார். ஆனால், தொடர்ச்சியாக தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறோமே?”

``இந்திய அணி வீழ்ச்சியில் இருக்கும்போது கம்பீர் பயிற்சியாளர் ஆகியிருந்தால் இப்படியான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்க மாட்டார். ஆனால், இந்திய அணி உச்சத்தில் இருக்கும் காலக்கட்டத்தில் கம்பீர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அதனால்தான் இந்த சோதனையான காலக்கட்டத்தை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் எல்லாமே ஸ்டார்கள். ஐ.பி.எல் இல் பெரும் பணத்தை சம்பாதிக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் ஒரு பிராண்டாக நிற்கின்றனர். இவர்களை வழிநடத்த 'Man Management' தான் மிக முக்கியம். ரவிசாஸ்திரி எப்படி இந்திய அணியை வழிநடத்தினார் என பாருங்கள். ஒரு நண்பர் போல தோள் மேல் கைப்போட்டுக் கொண்டு சூழலை இலகுவாக வைத்து அணியை வெற்றிகளை நோக்கி நகர்த்தினார்.

Gambhir - கம்பீர்

டிராவிட்டும் வீரர்களின் வழக்கத்தில் எந்த இடரையும் செய்யமாட்டார். வீரர்களுக்கு அவர்களின் விருப்பம்படி சுதந்திரம் கொடுப்பார். வீரர்களின் மீது அழுத்தம் ஏற்றக்கூடிய, வீரர்களை கண்டிப்போடு நடத்தக்கூடிய பயிற்சி முறை செட் ஆகாது. கம்பீர் இதை கற்றுக்கொள்வார் என நினைக்கிறேன்.”

Champions Trophy : சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா ஆடுவாரா? - அணியை எப்போது அறிவிக்கும் பிசிசிஐ?

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்தத் தொடருக்கான உத்தேச அணியை ஜனவரி 12 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி கெடு விதித்... மேலும் பார்க்க

Indian Team: 'கடைசி வாய்ப்பில் கோலி; ஓய்வு அறிவிப்பை நோக்கி ரோஹித் சர்மா!' இருவரின் எதிர்காலம் என்ன?

பார்டர் கவாஸ்கர் தொடர் நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணி 3-1 என தொடரை இழந்திருக்கிறது. இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் சோபிக்கவே இல்லை. தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்ததே விராட் கோலியும் ர... மேலும் பார்க்க

Andhra: "ஜெல்லி மீன்களின் அச்சுறுத்தல்; ஆமைகளின் துணை" - 52 வயதில் கடலில் 150 கி.மி நீந்திய பெண்!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த 52 வயது பெண்மணி விசாகாபட்டினம் முதல் காக்கிநாடா வரை 150 கிலோ மீட்டர் தூரத்தைக் கடலில் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.கோலி ஷியாமளா என்ற நீச்சல் வீராங்கனை டிசம... மேலும் பார்க்க

Aus v Ind : 'தொடரை இழந்த இந்தியா!' - கம்பீர் செய்த அந்த 3 தவறுகள்

சிட்னி டெஸ்ட்டை ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. அத்தோடு இந்தத் தொடரையும் 2-1 என வென்று கோப்பையையும் கைப்பற்றியிருக்கிறது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்ற ... மேலும் பார்க்க

அர்ஜுனா விருது: 'சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டிருக்கோம்; ஆனாலும் அப்பா..!' - நெகிழும் துளசிமதி முருகேசன்

கடந்த செப்டம்பர் மாதம் பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனைப் படைத்திருந்தார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன்.இதனைத் தொடர்ந்து... மேலும் பார்க்க