பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் நண்பன்! ரசிகர்கள் பாராட்டு!
அர்ஜுனா விருது: 'சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டிருக்கோம்; ஆனாலும் அப்பா..!' - நெகிழும் துளசிமதி முருகேசன்
கடந்த செப்டம்பர் மாதம் பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனைப் படைத்திருந்தார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன்.
இதனைத் தொடர்ந்து விளையாட்டு துறையில் உயரிய விருதான அர்ஜுனா விருதை மத்திய அரசு துளசிமதிக்கு நேற்று (2.1.2025) அறிவித்திருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விருது அறிவித்தது தொடர்பாக அவரைத் தொடர்புக்கொண்டு பேசினோம். "நான் 'veterinary medicine' 3 ஆம் ஆண்டு படிச்சிட்டு இருக்கேன். நேற்று க்ளாஸில் இருந்தேன். எப்போதும் 5 மணிக்குத்தான் முடியும்.
க்ளாஸில் ஃபோன் பயன்படுத்தக்கூடாது என்பதால் எனக்கு விருது அறிவித்தது எதுவும் தெரியாது. க்ளாஸ் முடிந்தப்பிறகு ஃபோனை எடுத்துப்பார்த்தேன். நிறைய அழைப்புகளும், வாழ்த்து மெசேஜ்களும் வந்திருந்தது. அதன்பிறகுதான் எனக்கு விருது அறிவித்தது தெரியவந்தது. உடனே அம்மா, அப்பா எல்லோருக்கும் ஃபோன் பண்ணி பேசினேன். விருது அறிவித்ததுல அவர்களுக்கும் ரொம்ப சந்தோஷம். எனக்கும் ரொம்ப சந்தோஷம்.
அப்பாதான் சின்ன வயசுல இருந்தே எனக்கு பயிற்சி கொடுத்தாரு. அதுனால அப்பாவுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். சின்ன வயசுல இருந்தே ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறோம். வர்தா புயல் வந்து வீடு எல்லாம் இடிஞ்சு விழுந்தப்போது நிவாரண நிதிக்காக நாங்க நின்றிருக்கிறோம். 3000 ரூபாய் நிதிக்காக எல்லாம் நாங்க காத்திருந்திருக்கிறோம்.
அடுத்த வேள சாப்பாட்டுக்கு என்ன பண்றதுனு கஷ்டப்பட்டிருக்கிறோம். அவ்ளளவு கஷ்டத்துளையும் என்னைய சாதிக்க வைக்கணும்னு அப்பா நினைச்சாரு. இந்த விருதை எனக்கு அறிவித்ததுல ரொம்ப மகிழ்ச்சி. எனக்கு உதவியாக இருந்த தமிழக அரசுக்கும், விருது அறிவித்த மத்திய அரசுக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...