பிப்ரவரியில் தேர்தலா? தில்லி பேரவை தேர்தல் தேதி இன்று வெளியாகிறது!
Virat Kohli : ``இந்திய அணிக்கு சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை"- கோலியை கடுமையாகச் சாடும் இர்பான் பதான்
பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றிருக்கிறது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியை வென்ற போதும் இந்திய அணி தொடரை இழந்ததற்கு சீனியர் வீரர்களே மிக முக்கிய காரணம். இந்நிலையில், 'இந்திய அணிக்கு சூப்பர் ஸ்டார் கலாசாரமே வேண்டாம். அணிக்காக ஆடும் கலாசாரத்தை உருவாக்குங்கள்.' என கோலியை குறிப்பிட்டு முன்னாள் வீரர் இர்பான் பதான் கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் கோலி 9 முறை பேட்டிங் ஆடியிருக்கிறார். 8 முறை அவுட் ஆகியிருக்கிறார். அவுட் ஆன 8 முறையும் ஒரே மாதிரியாக ஆப் ஸ்டம்புக்கு வெளியே பேட்டை விட்டு எட்ஜ் ஆகியே அவுட் ஆகியிருக்கிறார். கோலியின் சொதப்பலான பேட்டிங்குமே இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. இந்நிலையில், சிட்னி டெஸ்ட் முடிந்தவுடன் பேசியிருக்கும் இர்பான் பதான், 'சூப்பர் ஸ்டார் கலாசாரத்துக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரு வீரர் தன்னைத்தானே மேம்படுத்திக் கொண்டு அணியையும் மேம்படுத்த வேண்டும். இந்தத் தொடருக்கு முன்பாக உள்ளூர் அளவில் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு இருந்தது. ஆனால், சில வீரர்கள் அதைத் தவிர்த்துவிட்டார்கள். இந்த கலாசாரத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.
விராட் கோலி கடைசியாக எப்போது உள்ளூர் போட்டியில் ஆடினார் என்பதை யோசித்துப்பாருங்கள். 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஓய்வுபெற்றுவிட்ட சச்சின் கூட அதன்பிறகு உள்ளூர் போட்டியில் ஆடியிருக்கிறார். கோலியின் மதிப்பைக் குறைக்கவேண்டும் என்பதற்காக இதை சொல்லவில்லை. கோலி ஒரே மாதிரியாகத் தொடர்ந்து அவுட் ஆகிறார். அதை சுனில் கவாஸ்கர் பலமுறை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
கவாஸ்கரும் மைதானத்தில்தான் இருக்கிறார். கவாஸ்கரிடம் வந்து அமர்ந்து அவரின் பிரச்னைகளைப் பற்றி பேச எவ்வளவு நேரம் ஆகிவிடப் போகிறது? தவறிலிருந்து திருத்திக்கொள்ள கடினமாக உழைக்க வேண்டும். கோலி அப்படி செய்வதாகத் தெரியவில்லை." எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.