டொனால்டு டிரம்ப் வெற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிப்பு: ஜன.20 பதவியேற்பு...
Gambhir: ``எல்லோரும் உள்ளூர் கிரிக்கெட் ஆடவேண்டும்; இலையென்றால்..." - BGT தோல்விக்குப் பின் கம்பீர்
சொந்த மண்ணில் நியூசிலாந்துடன் முதல்முறையாக டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தற்போது 9 ஆண்டுகளாகத் தன்வசம் இருந்த பார்டர் கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியாவில் இழந்திருக்கிறது.
முதல்முறையாக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்பட்ட இந்தத் தொடரில் 1 - 3 என இந்தியா தோல்வியைத் தழுவியிருக்கிறது. இந்தத் தொடரில் ஒற்றை ஆளாக பவுலிங்கில் ஜொலித்த பும்ரா, மொத்தமாக 32 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார்.
அதேசமயம், கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை. கோலி இந்தத் தொடர் முழுவதும் 9 இன்னிங்ஸ்களில் ஒரேயொரு சதம் உட்பட 190 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். அதேபோல், ரோஹித் 5 இன்னிங்ஸ்களில் 31 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். இந்த நிலையில், எல்லோரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார்.
சிட்னி டெஸ்ட் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கவுதம் கம்பீர், ``எந்த வீரரின் எதிர்காலம் குறித்தும் என்னால் பேச முடியாது. அது அவர்கள் கையில் உள்ளது. ஆனால், நான் சொல்வது என்னவென்றால், அவர்களுக்கு இன்னும் அந்தப் பசி, ஆர்வம் இருக்கிறது. அவர்களால் இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறேன். அதேபோல், ஒவ்வொருவரும் தங்களின் ஆட்டம் எங்கிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். அது கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, மற்ற வேலையாக இருந்தாலும் சரி... மிக முக்கியம். ஏனெனில், இறுதியில் இது என்னுடைய அணியும் அல்ல, உங்களுடைய அணியும் அல்ல இந்த நாட்டின் அணி.
மேலும், என்னுடைய முக்கியமான பொறுப்பு என்பது அனைத்து வீரர்களிடத்தும் நான் நியாயமாக இருப்பது. இரண்டு மூன்று பேருக்கு மட்டும் அப்படி இருந்தால், என் வேலைக்கு நான் நேர்மையற்றவனாகிவிடுவேன். எனவே, இதுவரை அறிமுகமாகாத வீரராக இருந்தாலும் சரி, 100 டெஸ்ட் போட்டிகள் ஆடியவராக இருந்தாலும் சரி, அனைவரிடமும் நேர்மையாகவும், சமமாகவும் இருக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.
அதேபோல், எல்லோரும் உள்ளூர் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். உள்ளூர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்காக ஏதோ ஒரு போட்டியில் விளையாடுவதல்ல, நேரம் கிடைக்கும்போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். உள்ளூர் போட்டிகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் விரும்பும் வீரர்களை ஒருபோதும் பெற முடியாது." என்று கூறினார்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அடுத்தகட்ட திட்டம் என்ன, இளைஞர்களுக்கு வழிவிடுவதற்கான தருணம் இதுதானா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ``இப்போதுதான் தொடர் முடிந்திருக்கிறது. அடுத்து என்ன என்று திட்டமிடுவதற்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கிறது. எனவே, அதைப் பற்றி பேசுவதற்கு இது சரியான தருணம் அல்ல. விளையாட்டில் போட்டியின் அணுகுமுறை, வடிவங்கள் என எல்லாம் இன்று மாறிவருகிறது. இங்கிலாந்து தொடருக்கு முன் என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம். ஆனால், எது நடந்தாலும் இந்திய அணியின் நலனுக்காகவே இருக்கும்." என்றும் கம்பீர் பதிலளித்தார்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...