2வது காலாண்டில் ரூ.3.6 கோடி நஷ்டத்தை பதிவு செய்த மொபிகுவிக்!
Karun Nair 2.0: `5 மேட்ச், 4 சதம், 542 ரன்கள்.. உலக சாதனை' - இந்திய அணியின் கதவை தட்டும் கருண் நாயர்
2016 டிசம்பரில் இந்தியா - இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில், சென்னையில் நடைபெற்ற 5-வது போட்டியில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக முச்சதம் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் கருண் நாயர். அந்த டெஸ்ட் தொடரில், தொடர் நாயகன் விருது வென்ற விராட் கோலி அடித்திருந்த 655 ரன்களில், கிட்டத்தட்ட பாதி ரன்களை (303*) அந்த ஒரே இன்னிங்ஸில் அடித்த கருண் நாயருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது பலரும் வரவேற்றனர். டெஸ்ட் போட்டிகளில் சேவாக்குக்கு பிறகு முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் இவர்தான்.
இது நிகழ்ந்தே 8 ஆண்டுகள் ஓடிவிட்டது, இன்னும் வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடிக்கவில்லை. அதேசமயம், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குப் பிறகு 2017-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸ்களில் 54 ரன்கள் மட்டுமே அடித்ததால் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர் இன்றுவரை அணியில் இடம்பெற முடியவில்லை. தற்போது நடந்து முடிந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தில் ரூ. 50 லட்சத்துக்கு டெல்லி அணியால் கடைசி நேரத்தில் வாங்கப்பட்டார். இந்த நிலையில், நடப்பு விஜய் ஹசாரே தொடரில் தன்னுடைய சிறப்பான வெளிப்படுத்தி, உலக சாதனை மூலம் இந்திய அணியின் கதவை பலமாகத் தட்டியிருக்கிறார் கருண் நாயர்.
விதர்பா அணிக்காக விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ஆடிவரும் கருண் நாயர், நேற்று முன்தினம் உத்தரப்பிரதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் 112 ரன்கள் குவித்து தனது அணியின் வெற்றிக்கு வித்திட்ட கையோடு, லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆட்டம் இழக்காமல் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். கடந்த டிசம்பர் 23 அன்று ஜம்மு காஷ்மீர் அணிக்கெதிரான ஆட்டத்தில் 112* ரன்கள் அடித்த கருண் நாயர், அதன் தொடர்ச்சியாக சத்தீஸ்கர் அணிக்கெதிராக 44*, சண்டிகர் அணிக்கெதிராக 163*, தமிழ்நாடு அணிக்கெதிராக 111*, உத்தரப்பிரதேச அணிக்கெதிராக 112 என மொத்தமாக 542 ரன்கள் குவித்திருக்கிறார்.
இதன் மூலம், 2010-ல் நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் பிராங்கிளின் அவுட் ஆகாமல் 527 ரன்கள் குவித்த சாதனையை கருண் நாயர் முறியடித்திருக்கிறார். இப்போதைக்கு, இந்தப்பட்டியலில் ஜோஷ்வா வான் ஹெர்டன் (512), ஃபக்கர் ஜமான் (455), தௌஃபீக் உமர் (422) ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். மேலும், நடப்பு விஜய் ஹசாரே தொடரில் அதிக சதங்கள் (4) அடித்தவர்கள் பட்டியலில் இவரே தற்போது முதலிடத்தில் இருக்கிறார்.
கருண் நாயர் இதே ஃபார்மில் தொடர்ச்சியாக ஆடும் பட்சத்தில் இந்திய அணியில் இவருக்கு கதவுகள் திறக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...