ஸ்ரீவில்லிபுத்துார்: பள்ளி மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை... தலைமையாசிரியர் கைது!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போகோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைதுசெய்தனர். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம் அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடக்கப்பள்ளியும், மேல்நிலைப்பள்ளியும் அருகருகே இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி மாணவர்கள் பள்ளி மைதானத்துக்கு விளையாடுவதற்காக வந்துள்ளனர். அதேசமயம் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நிமித்தமாக தலைமையாசிரியர் ராஜேஷூம் பள்ளிக்கு வந்திருக்கிறார்.
அப்போது, பள்ளிக்கு விளையாடுவதற்காக வந்த 11-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேருக்கு, தலைமை ஆசிரியர் ராஜேஷ் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. அப்போது அருவருப்பு பட்டு நெளிந்த பள்ளி மாணவர்கள், சுதாரித்துக்கொண்டு ராஜேஷின் பிடியில் இருந்து தப்பித்து ஓடிவந்துள்ளனர். தொடர்ந்து அந்த மாணவர்கள் இந்த விஷயத்தை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மேல்நிலைப்பள்ளி தலைமையசிரியர், மாவட்ட கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்தவும், மாவட்ட கல்வி அலுவலர் வாயிலாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலகுக்கு புகார் வரப்பெற்றது.
அதன்பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், தலைமை ஆசிரியர் ராஜேஷ், மாணவர்களிடம் அத்துமீறி நடந்துக் கொண்டது தெரியவந்ததையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் ராஜேஷை போக்சோ சட்டத்தின் கீழ் செய்தனர். தொடர்ந்து அவர், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படார்" என்றனர்.