யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்!
ஷீஷ் மஹால் விவகாரம்: முதல்வர் இல்லத்துக்குள் நுழைய முயன்ற ஆம் ஆத்மியினர் தடுத்து நிறுத்தம்!
தில்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வாழ்ந்து வந்த ஃபிளாக்ஸ்டாப் சாலையில் உள்ள தில்லி முதல்வர் இல்லத்துக்குள் நுழைய முயன்ற ஆம் ஆத்மி தலைவர்கள் தடுத்துநிறுத்தப்பட்டனர்.
தில்லியில் அரவிந்த் கேஜரிவால் வாழ்ந்து வந்த வீட்டுக்குள் இன்று மாலை நுழைய முயன்ற ஆம் ஆத்மி அமைச்சர் சௌரவ் பரத்வாஜ், எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தில்லியின் முதல்வராக இருந்த போது அரவிந்த் கேஜரிவால் வாழ்ந்து வந்த இந்த வீட்டை பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தியதாகவும், இங்கு தங்க முலாம் பூசப்பட்ட கழிப்பறை, நீச்சல் குளம், மினி மதுபான பார் இருப்பதாகவும் பாஜகவினர் புகைப்படங்களுடன் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த பங்காளாவுக்குள் வேறு யாரும் நுழைய அனுமதியும் மறுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், உண்மையைக் கண்டறிவதாகக் கூறிய சௌரவ் பரத்வாஜ், சஞ்சய் சிங் ஆகியோர், பங்களாவுக்குள் செய்தியாளர்களுடன் நுழைந்து உண்மையை வெளிச்சம்போட்டுக் காட்ட முயன்றனர். ஆனால், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கண்ணாடி மாளிகையின் பெயர் ஷீஷ் மஹால். இந்த ஆடம்பர மாளிகை போன்று, அரவிந்த் கேஜரிவால் வாழ்ந்த முதல்வர் மாளிகை மாற்றப்பட்டிருப்பதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், இன்று பங்களாவுக்குள் நுழைய முயன்ற ஆம் ஆத்மியினர் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.