`தாள்கள் உருவாக்கிய தானைத் தலைவன்' - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 14
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி
நமது நிருபர்
" நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட அணைப் பாதுகாப்புச் சட்டம் இருந்தும், நிர்வாகம் இன்னும் நீண்ட தூக்கத்திலிருந்து மீளவில்லை' என்று முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த், தீபாங்கர் தத்தா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 130 ஆண்டுகள் பழைமையான இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணை நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தும் வகையில், 2021-ஆம் ஆண்டு அணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியதாகவும், அப்போதிலிருந்து எதுவும் நடக்கவில்லை என்றும் கேரள அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட அணையின் பாதுகாப்புக்கு தேசியக் குழுவை மத்திய அரசு இன்னும் அமைக்கவில்லை என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தனர்.
மேலும், அணைப் பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றிய போதிலும், நிர்வாகம் இன்னும் நீண்ட தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ளவில்லை என்பதை அறிந்து நாங்கள் வியப்படைகிறோம் என்று நீதிபதிகள் கூறினர்.
தமிழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வி.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "தொடர்புடைய சட்டத்தின் கீழ், அணை பாதுகாப்பு ஆணையத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அணையின் கட்டமைப்பு குறித்து தணிக்கை செய்யப்பட உள்ளது' என்றார்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், "அணைப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 5(2)-இன் கீழ், பிரிவு 5(1)-இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தேசியக் குழு, இச்சட்டம் செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து 60 நாள்களுக்குள் அமைக்கப்பட வேண்டும். மேலும், அதன் பிறகு அக்குழு ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் மீண்டும் அமைக்கப்பட வேண்டும்.
இத்தகைய தேசியக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை என எங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட தேசியக் குழுவின் அரசியலமைப்பு, அமைப்பு அல்லது செயல்பாடுகள் தொடர்பான விதிகள், விதிமுறைகள் கூட வகுக்கப்படவில்லை. இதனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். மேலும், இச்சட்டத்தின் கீழ் தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் பொறுப்பு தொடர்பாக மத்திய அரசின் தலைமைச் சட்ட ஆலோசகர், அந்த அமைப்பிடமிருந்து விவரம் பெற்றுத் தெரிவிக்க வேண்டும்' என்றனர்.
முன்னதாக, "முல்லைப்பெரியாறில் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீர், அணைக்கு சேதத்தை ஏற்படுத்தினால் அணையின் கீழ்ப் பகுதியில் வசிக்கும் 50 முதல் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அணையின் பாதுகாப்பு குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும்' என்று மனுதாரர் மேத்யூஸ் ஜெ. நெடும்பாறை கோரினார்.