செய்திகள் :

பாசக்கார பெற்றோர்; 'சூப்'பில் மிதக்கும் கால்; மனிதர்களின் முகங்களை சிதைக்கும்... இது கரடிகளின் கதை

post image
காடுகள் துண்டாடப்பட்டுவிட்டதால், மனித - விலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. யானை, புலி, சிறுத்தைகளைப்போலவே குடியிருப்புப் பகுதிகளுக்குள் கரடிகளின் வருகையும் அதிகரித்திருக்கிறது.

ஏன் இப்படி, என்னதான் தீர்வு என்கிற இரண்டு கேள்விகளுடன் சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம் அவர்களிடம் பேசினோம்.

கரடி
கரடி

''மனித - விலங்கு எதிர்கொள்ளலில் கரடிகளால் மனிதர்களுக்கு நிகழும் கொடூரங்கள், மனிதர்களால் கரடிக்கு நிகழும் கொடுமைகள் இரண்டுமே பதைபதைக்க வைத்துவிடும். கரடிகள் அடர்ந்த வனப்பகுதிகளில் வசிப்பவை. அவை மனிதர்களுடைய கண்களுக்குத் தென்படாது. மனிதர்களின் பெருக்கம் காரணமாக காடுகள் நகரமயமாகி வருவதால், மனித - கரடி எதிர்கொள்ளல் பரவலாக நடைபெற ஆரம்பித்துவிட்டன. கரடிகள் கூச்சச் சுபாவிகள், நாம் அவற்றை தாக்கிவிடுவோம் என்கிற அச்சத்திலோ அல்லது பாதுகாப்பு நிமித்தம் நாம் அவற்றைத் தாக்க முற்படும்போதோ தான் கரடிகள் நம்மைத் தாக்கும். கரடிகளால் காயமடைந்தவர்களின் நிலையைக் கண்கொண்டு பார்க்கமுடியாது. கரடியின் கால் நகங்கள் கூர்மையாக இருப்பதால், மனிதர்களின் தலைமீது காலைத் தூக்கிப்போட்டு லேசாக இழுத்தாலே முகம் சிதைந்துவிடும். கரடிகளால் தாக்கப்பட்டவர்கள் பலரும் முகம் முழுக்க சேதமடைந்துவிட்டதால் ஒரு கண்ணையோ அல்லது இரண்டு கண்களையுமோ இழந்திருப்பார்கள். புலி, சிறுத்தைபோல கரடிகள் பெரும்பாலும் உயிராபத்து ஏற்படுத்தவில்லையென்றாலும், பாதிக்கப்பட்டவர்களை பாதி உயிராக்கிவிடுகின்றன என்பதே உண்மை.

இன்னொரு பக்கம், கரடிகள் விஷயத்தில் மனிதர்களில் சிலரும் கொடூரமானவர்கள்தான். வன விலங்குகளை வைத்து தொழில் செய்யக்கூடாது என்கிற சட்டம் வருவதற்கு முன்னால், கரடிகளை வைத்து வித்தைக்காட்டியவர்கள் அவற்றுக்கு செய்தவையெல்லாம் கொடூரங்களின் உச்சம். கரடிகளின் இனப்பெருக்க காலத்திற்காகக் காத்திருந்து, தாய்க்கரடியைக் கொன்றுவிட்டு குட்டிகளைத் தூக்கிச் சென்றுவிடுவார்கள். பின்னர் அவற்றுக்கு கருத்தடை செய்து, பழுக்கக் காய்ச்சிய கம்பியால் மூக்கில் துளையிட்டு கயிற்றைக்கட்டி, அவற்றின் கோரைப்பற்களை உடைத்து, அதன்பிறகு நடனமாட பழக்கப்படுத்துவார்கள். உலகளவில், கரடி கால் சூப்பும், அதன் கறியும் பக்கவாத நோய்க்கும் ஆண்மைக் குறைவிற்கும் முக்கிய மருந்தாக இருப்பதாக சீனா, ஜப்பான், வியட்நாம், தாய்லாந்து போன்ற சில நாட்டினர் நம்புவதால், இந்த வகையிலும் கரடிகள் மனிதர்களுக்கு இரையாகிக்கொண்டிருக்கின்றன'' என்று வருத்தப்பட்டவர், கரடிகளைப்பற்றி தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

கரடி
கரடி

''கரடிகள்தாம் காடுகளுக்கு மிக மிக முக்கியம். அவைதாம் விதைப்பரப்பல் என்னும் முக்கியமான வேலையை காடுகளுக்குள் செய்துகொண்டிருக்கின்றன. காற்று வழி விதைகளைப் பரப்புகிற சில மரங்களைத் தவிர்த்து, மற்ற மரங்கள் தங்களுடைய விதைப் பரவலுக்கு காடுகளில் இருக்கிற பறவைகளையும் விலங்குகளையுமே சார்ந்திருக்கிறது. குறிப்பாகக் கரடிகளை... கரடிகள் அனைத்துண்ணி. பழங்களையும் விரும்பி உண்ணும். கரையான் புற்றையும் ஒரு கைபார்க்கும். உயரமான மரங்களில் ஏறுவதற்கும், கரையான் புற்றைக் கீறி சாப்பிடுவதற்கும் ஏற்றபடி அதன் நகங்கள் மிக மிக கூர்மையாக இருக்கும். இப்படி பழங்களையும் கரையான்களையும் சாப்பிட்டுவிட்டு, கரடிகள் போடும் எச்சத்தில் புதிய புதிய மரங்கள் உருவாகி, காடுகள் அடர்ந்த காடுகளாகும். கரடிகள் தேன் விரும்பிகள். தேனீக்களின் கூட்டைக் கலைத்து, அவற்றிடம் உடல் முழுக்க கொட்டு வாங்கினாலும் அதன் உடலின் மேலிருக்கிற கனமான மயிர்ப்போர்வை கரடியைக் காப்பாற்றி விடும். குட்டிகள் விஷயத்தில் பாசக்கார பெற்றோர்கள் கரடிகள். குட்டிகள் வளரும்வரை தாயும் தந்தையும் அவற்றைத் தோள்களிலேயே சுமந்துகொண்டு இரைதேடும்'' என்றவர், மனிதர்கள் வனவிலங்குகள் எதிர்கொள்ளலைத் தவிர்க்கும் நுட்பத்தைப்பற்றி விளக்க ஆரம்பித்தார்.

''பழங்குடிகள் காடுகளுக்குள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வருவதால், விலங்குகளின் காலடிச்சுவடுகள், அதன் எச்சம், சிறுநீர் போன்றவற்றின் மூலம் அவற்றின் நடமாட்டத்தை அறிந்து, அவற்றை எதிர்கொள்ளாமல் தவிர்த்து விடுவார்கள். ஒரு விலங்கின் வாசனையை நுட்பமாக அறிந்தவர்கள் அவர்கள். ஆனால், சமவெளிப் பகுதியில் வாழ்ந்த மனிதர்களுக்கு விலங்குகள் குறித்த இந்த நுட்பங்கள் ஏதும் தெரியாததால், மனித விலங்கு எதிர்கொள்ளல் சுலபமாக நிகழ்ந்துவிடுகிறது.

கோவை சதாசிவம்

ஒன்றையொன்று சார்ந்து வாழும் உயிர்ச்சூழலில், மனிதர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருவதால், காடு அழிப்பு, காடுகள் துண்டாடப்படுவது என விலங்குகளுக்கு பெரியளவில் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. வன விலங்குகளின் உணவுக் களஞ்சியம் வெகுவாக குதறப்பட்டு விட்டதால், உணவு தேடித்தான் வனவிலங்குகள் மனிதக் குடியிருப்புகளுக்கு நெருக்கமாகவோ அல்லது குடியிருப்புக்குள்ளோ வந்துவிடுகின்றன. கரடிகள் விஷயத்தில், காட்டையொட்டிய ஊர்களில் இருப்பவர்கள் தேனீ வளர்த்தால், அந்தத் தேனைச் சாப்பிடுவதற்காக கரடிகள் ஊருக்குள் வரலாம். கோழிக்கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் எப்படி சிறுத்தைகள் ஊருக்குள் வருமோ, அதேபோல உணவுக்கழிவுகள், காய்கறி மற்றும் பழக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் கரடிகள் வரும்.

வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வனவிலங்குகளால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்குவதைப் போலவே, காடுகளை விரிவாக்கம் செய்வதுதான் மனித - விலங்கு எதிர்கொள்ளலைத் தவிர்ப்பதற்கான சரியான வழி'' என்கிறார் கோவை சதாசிவம்.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்; விமானம், ரயில் சேவை பாதிப்பு - பயணிகள் அவதி!

வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் தென்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் டெல்லியில் அருகில் இருப்பவர்களைக்கூட பார்க்க முடியவில்லை. மோசமான பனிமூட்டத்தால் டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

முதுமலை: தாய்ப் பாலுக்கு மாற்றாக லேக்டொஜென், கதகதப்புக்கு ஹீட்டர்; எப்படி இருக்கிறது குட்டி யானை?

கோவை மாவட்டம் துடியலூர், வரப்பாளையம் பகுதியில் கடந்த வாரம் பெண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. அதன் அருகில் பச்சிளம் பெண் யானைக் குட்டி ஒன்று பரிதவித்துக் கொண்டிருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது... மேலும் பார்க்க

ஒரே துணை; ஒரேயொரு முட்டை; சடலங்களே உணவு... கொத்துக் கொத்தாக இறந்துபோன பாறு கழுகுகளின் கதை!

வயிறு புடைக்க இறந்த மாட்டின் இறைச்சியை உண்டுவிட்டு மரக்கிளையில் வரிசையாக உட்கார்ந்துக்கொண்டிருந்த பாறு கழுகுகள், கண்கள் சொருகி, வாயில் நீர் வடிய ஒவ்வொன்றாக மரக்கிளைகளில் இருந்து கீழே பொத் பொத்தென்று வ... மேலும் பார்க்க

கோவை : `மற்ற யானை கூட்டங்கள் ஏற்கவில்லை' - தாயை இழந்த குட்டி யானை முதுமலை முகாமுக்கு அனுப்பி வைப்பு

கோவை மாவட்டம், துடியலூர் அருகேவரப்பாளையம் பகுதியில்கடந்தவாரம்ஒருபெண் யானை உயிரிழந்தது. உயிரிழந்த பெண் யானை அருகிலேயேபிறந்து சில மாதங்களே ஆன அதன் குட்டி பெண்யானை சுற்றித் திரிந்தது.கோவை யானைஅம்மாவின் இ... மேலும் பார்க்க

அரிட்டாபட்டி: `ஐநூற்றுப் பெருந்தெரு வணிகத் தலமாக..!' - தொல்லியல் அறிஞர்கள் சொல்வது என்ன?

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க கூடாது என்று மூத்த தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் ஒருங்கிணைப்பில் தமிழகத்தின் மூத்த தொல்லியல் அறிஞர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.... மேலும் பார்க்க