சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் துரைமுருகனுக்கு எதிரான வழக்கில் தீா்ப்பு ஒத்த...
வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்; விமானம், ரயில் சேவை பாதிப்பு - பயணிகள் அவதி!
வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் தென்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் டெல்லியில் அருகில் இருப்பவர்களைக்கூட பார்க்க முடியவில்லை. மோசமான பனிமூட்டத்தால் டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. டெல்லியிலிருந்து கிளம்பவேண்டிய 400 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இது தவிர 100 ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் 2 லட்சம் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். ரயில்கள் ஆங்காங்கே அப்படியே நின்றன. அதிகமான ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சில ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது. டெல்லியில் காலை 9 மணிக்கு 50 மீட்டர் தூரத்திற்குள் இருப்பவர்களை மட்டுமே பார்க்க முடியும் அளவுக்கு வெளிச்சம் இருந்தது. கடுமையான குளிரும் நிலவியது. இதனால் ரயில் நிலையங்களில் பயணிகள் கடும் குளிரில் கஷ்டப்பட்டனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து புனே செல்லவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்றப்பட்ட பயணிகள் 7 மணி நேரம் விமானத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இரவு 9.40 மணிக்கு விமானம் புறப்படவேண்டும். ஆனால் ஆரம்பத்தில் 30 நிமிடம் தாமதம் என்று சொன்னார்கள். 200 பயணிகள் விமானத்தில் ஏறிவிட்டனர். பயணிகள் அமர்ந்து ஒரு மணி நேரம் ஆன பிறகும் விமானம் புறப்படவில்லை. விமான ஊழியர்களிடம் இது குறித்து கேட்டதற்கு பனிமூட்டம் காரணமாக விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். விமானம் புறப்பட மேலும் ஒரு மணி நேரம் தாமதமானதால் பயணிகள் விமான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விமானம் விரைவில் புறப்படும் என்று வாக்குறுதியளித்தனர். ஆனாலும் விமானம் புறப்படவில்லை. விமானத்தில் அதிகமான பயணிகள் வயதானவர்கள் ஆவர். எனவே அவர்கள் விமானத்தில் இருந்து இறங்கி டெர்மினல் கட்டடத்தில் ஓய்வு எடுக்கவேண்டும் என்று விரும்பினர்.
அதற்கும் அனுமதிக்கவில்லை. இதனால் அடிக்கடி பயணிகளுக்கும், விமானபணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து அம்பாதாஸ் என்ற பயணி கூறுகையில்,''பனிமூட்டத்தால் விமானம் தாமதமாகிறது என்று புரிகிறது. ஆனால் பல மணி நேரம் எங்களை விமானத்திற்குள் ஏன் இருக்கவைக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதிகாலை 5.30 மணிக்கு பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பஸ்சில் ஏற்றப்பட்டு டெர்மினல் கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மீண்டும் செக்யூரிட்டி சோதனையில் ஈடுபடும்படி கேட்டுக்கொண்டனர். அதற்கு இரண்டு மணி நேரம் ஆனது. இறுதியாக காலை 7.30 மணிக்குத்தான் விமானம் புறப்பட்டது.
காலை 10 மணிக்கு புனே வந்து சேர்ந்தது. 7 மணி நேரத்திற்கும் மேல் விமானத்தில் தங்கவைக்கப்பட்டதோடு, மீண்டும் செக்யூரிட்டி சோதனை என பயணிகள் இழுத்தடிக்கப்பட்டனர். புனே விமான நிலையத்திலும் கடுமையான பனிமூட்டம் தென்பட்டது. புனேயில் இருந்து கிளம்பவேண்டிய அனைத்து விமானங்களும் தாமதமாகவே புறப்பட்டது.