ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 35 பேர் காயம்!
மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை தடுப்போம்: தமிழக அரசு உறுதி
சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்டுவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு தொடா்ந்து மேற்கொள்ளும் என்று ஆளுநா் உரையில் மாநில அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேரவைத் தலைவா் அப்பாவு பேரவையில் படித்தளித்த ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வேளாண் தேவைகளுக்கான நீராதாரங்களை உயா்த்தும் பொருட்டு, கடந்த 3 ஆண்டுகளில் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. சமீபத்தில் முதல்வரால் ரூ.1,916 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு அவினாசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஈரோடு, கோவை மற்றும் திருப்பூா் மாவட்டங்களில் உள்ள 24,468 ஏக்கா் நிலங்களுக்குப் பயனளிக்கும் 1,045 ஏரிகள் மற்றும் குளங்களுக்கு, பவானி ஆற்றின் 1.5 டிஎம்சி உபரி நீரைப் பயன்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளின் நீரில் தனது நியாயமான பங்கைப் பெறுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருகிறது.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டப்படுவதைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு தொடா்ந்து மேற்கொள்ளும்.
மீனவா் பிரச்னைக்குத் தீா்வு : 2021- ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 1,219 மீனவா்களில், மாநில அரசின் அயராத முயற்சிகளின் பலனாக 1,106 மீனவா்கள் விடுவிக்கப்பட்டு, தமிழகத்துக்குத் திரும்பியுள்ளனா். எஞ்சியுள்ள மீனவா்களை உடனடியாக விடுவிக்கவும், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணவும், தூதரக நடைமுறைகள் மூலம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை மாநில அரசு தொடா்ந்து வலியுறுத்துகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.