லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
175 ஆண்டுகள் பழமையான ஊட்டி போலீஸ் ஸ்டேஷன்... குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாறுகிறதா?
200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஜான் சல்லிவன் உள்ளிட்ட ஆங்கிலேயர்கள், நவீன ஊட்டி நகரை நிர்மாணித்தனர். 'ஸ்டோன் ஹவுஸ்' எனப்படும் முதல் கல் பங்களா ஒன்றை எழுப்பியதுடன் பல்வேறு கட்டுமானங்களையும் எழுப்பினர். ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு சிறிய குன்றின் மீது முதல் காவல்நிலையம் ஒன்றை கட்ட திட்டமிட்டு 1850 - ம் ஆண்டு கட்டி முடித்துள்ளனர்.
1860 -ம் ஆண்டு முதல் காவல்நிலையம் செயல்பட தொடங்கியிருக்கிறது. இதுவே ஊட்டியின் முதல் காவல் நிலையமாகும். 1900 ஆண்டு தொடக்கத்தில் கேரளாவில் தீவிரமாக இயங்கி வந்த 'மாப்ளா ரெபெல்ஸ்' புரட்சி குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளானது இந்த காவல் நிலையம். 1921 -ல் நடத்தப்பட்ட அந்த தாக்குதலில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் என 4 பேர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்தும் செயல்பட்டு வந்த காவல் நிலையத்தை 2005 - ம் ஆண்டு இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கட்டடத்தை இடிக்க கூடாது என எதிர்ப்பு கிளம்பியது. இதனை ஏற்று, அந்த கட்டடத்தின் அருகிலேயே புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
2016 -ம் ஆண்டு முதல் புதிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது ஊட்டி பி- 1 போலீஸ் ஸ்டேஷன். பாரம்பர்யம் கொண்ட அந்த கட்டடத்தை காவல்துறையின் வரலாற்று அருங்காட்சியகமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நடைமுறைக்கு வரவில்லை.
இந்த நிலையில், காவல்துறையினரின் குழந்தைகளை பராமரிக்கும் மையமாக மாற்றும் முடிவு எட்டப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. குழந்தைகளை கவரும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள், கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் என வண்ண வண்ண ஓவியங்களால் தயாராகி வரும் இந்த பழைமையான காவல்நிலையம் குழைந்தைகள் பராமரிப்பு மையாக விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. கட்டிடம் 175 ஆண்டுகளை கடந்தாலும் உறுதி தன்மையுடன் உள்ளதாக கூறுகின்றனர்.