Stonehenge: இங்கிலாந்தில் பிரமாண்ட கல் சின்னம் உருவாக்கப்பட்டது ஏன்? - புதிய ஆய்வு கூறுவதென்ன?
Stonehenge
Stonehenge என்பது இங்கிலாந்தில் இருக்கும் பிரமாண்டமாக அடுக்கப்பட்ட கற்களின் அமைப்பாகும். இது தெற்கு இங்கிலாந்தில் உள்ள சாலிஸ்பரி சமவெளியில் அமைந்துள்ளது.
கிமு.3100 மற்றும் 1600 ஆண்டுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்ட இந்த சின்னத்தை ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லட்சம் மக்கள் உலகம் முழுவதிலுமிருந்து வந்து இந்த பிரமாண்டத்தைப் பார்த்துச்செல்கின்றனர். இந்த இடத்துக்கு நெடுந்தொலைவில் உள்ள தென்மேற்கு வேல்ஸ் மற்றும் வடகிழக்கு ஸ்காட்லாந்தில் இருந்தெல்லாம் மிகப்பெரிய கற்களை கொண்டுவந்து இந்த சின்னத்தை உருவாக்கியுள்ளனர்.
ஏன் கட்டப்பட்டது?
இத்தனை பிரசித்தி பெற்ற, மனிதர்களின் கடும் முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த சின்னத்தை யார் கட்டியது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதை ஏலியன்கள்தான் கட்டின என்ற கருத்தும் நிலவியது. காரணம் இப்படி ஒரு கற்களின் பிரமாண்டத்தைக் காட்சிப்படுத்தும் சின்னத்தை உருவாக்க காரணம் என்ன என்ற கேள்விக்கு விடை தெரியாமலேயே இருந்தது.
தற்போது ஆராய்சியாளர்கள் அந்த விடையை கண்டறிந்துள்ளனர்.
பண்டைய பிரிட்டனை ஒற்றுமைப்படுத்தவே இந்த சின்னம் உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். (பிரிட்டன் என்பது வேல்ஸ், ஸ்காட்லேண்ட் மற்றும் இங்கிலாந்து ஆகிய ராஜ்ஜியங்களின் கூட்டு.) ஐரோப்பாவிலிருந்து புதிய நபர்கள் வந்து பிரிட்டன் பேரரசை உருவாக்குவதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே இது உருவாக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
இதை உருவாக்க ஸ்காடிஷ் மற்றும் வேல்ஷ் மக்கள் தங்கள் நிலத்திருந்து பிரமாண்ட பாறைகளை நீண்ட தூரம் கடந்து எடுத்துவந்துள்ளனர். அதன் மூலம் பிரிட்டனில் உள்ள அனைத்து நாடுகளின் பங்களிப்பும் இதில் உறுதி செய்யப்படுகிறது. மேலும், அரசியல் ஒற்றுமையையும் வலியுறுத்துகிறது.
எப்படி கட்டப்பட்டது?
தனித்தனியாக இருக்கும் சமூகங்களை அடையாளப்படுத்தவே விசித்திரமான கற்கள் கொண்டுவந்து அடுக்கப்பட்டுள்ளன.
இந்த கற்களை நீண்ட தூரம் எடுத்து வருவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் 8 மாதத்துக்கு மேல் உழைத்திருப்பதாக குறிப்பிடுகின்றனர்.
ஸ்காட்லாந்தில் இருந்து தெற்கு இங்கிலாந்துக்கு இந்த கற்களை எடுத்து வருவது அசாதாரணமான காரியம் அல்ல... ஆனால் இரண்டு மக்கள் இனத்துக்குள்ளும் ஒத்துழைப்பு இருந்திருக்கும் என ஆய்வில் எடுத்துரைக்கின்றனர்.
மூன்று நிலங்களிலும் ஒரே மாதிரியான கலாசாரம், மரபு நிகழ்வதால் இந்த ஒத்துழைப்பு சாத்தியப்பட்டிருக்கும் என்கின்றனர்.