கேஜரிவாலை விசாரிக்க அமலாக்கத் துறைக்குத் துணைநிலை ஆளுநர் அனுமதி!
Senthil Balaji : `பிணையில் வெளிவந்த செந்தில் பாலாஜி அமைச்சரானது மிகப்பெரிய தவறு' - உச்ச நீதிமன்றம்
வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி, பண மோசடி செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக பணியமர்த்தியது 'மிகப் பெரிய தவறு' என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் பல சாட்சியங்கள் அரசு அதிகாரிகள் என்பதைச் சுட்டிக்காட்டியது. மேலும் செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் இருக்கக்கூடிய பிற வழக்குகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
``ஒருவர் விடுதலை பெற்ற உடனேயே அவரை அமைச்சராக்குவது சாதாரணமாக இருக்க முடியாது, இதில் ஏதோ மிகப் பெரிய தவறு நடந்திருக்கிறது. ஏனென்றால் அங்கு வேறு வழக்குகள் இருக்கலாம், வேறு யாராவது குற்றவாளியாக கட்டமைக்கப்படலாம். நாம் வழக்கின் உண்மைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்" என நீதிமன்றம் குறிப்பிட்டது.
நீதிபதிகள், செந்தில் பாலாஜி குறித்த வழக்குகளில் விசாரிக்கப்பட வேண்டிய சாட்சிகளின் பதிவுகளைக் கோரினர். அதில் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், சாட்சிகள் மற்றும் சாட்சிகளாக உள்ள அரசு ஊழியர்கள் எத்தனை பேர் என்பதையும் குறிப்பிட வேண்டும் என்றனர்.
இன்னும் விசாரணை நடத்தவேண்டியவர்கள் விவரங்களை உற்றுநோக்கிய நீதிமன்றம், அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட பணத்தை இழந்த பொது மக்களும் சாட்சியாக இருப்பதை எடுத்துரைத்தனர்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அமலாக்கத்துறை சார்பாக வாதாடினார். அவர் செந்தில் பாலாஜிக்கு கணிசமான செல்வாக்கு இருப்பதை நிறுவினார்.
``அவர் (செந்தில் பாலாஜி) சிறையில் இருந்தபோதும்கூட இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். அவர் மாநிலத்தில் அந்த செல்வாக்கைப் பயன்படுத்துகிறார்" என்றார் மேத்தா.
இதற்கு எதிராக செந்தில் பாலாஜி சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "எந்த மாநிலத்திலும் செல்வாக்கு மிக்க பலர் இருக்கின்றனர், இங்கே இலாகா இல்லாத ஒருவர் இருக்கிறார்" என வாதாடினார்.
"இது ஒன்றும் அரசியல் தளம் அல்ல, இதை நீதிமன்றமாக இருக்க விடுங்கள்" என்றார் மேத்தா.
மனுதாரர் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், இந்த வழக்கில் பல சாட்சியங்கள் மாநில அரசின் அதிகாரிகள் என்ற வாதத்தை முன்வைத்தார்.
அதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஜனவரி 15, 2025 தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி வேண்டுமென்றே விசாரணை நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை தாமதப்படுத்த முயல்வதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டது முதல், இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை தடம் புரண்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.