`பழிக்குப் பழியாக கொலை' - விடுமுறையில் ஊருக்கு வந்த சட்டக்கல்லூரி மாணவருக்கு நேர்ந்த விபரீதம்
நெல்லை மாவட்டம், சேரன்மாதேவி கீழ நடுத்தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் விடுமுறைக்காக சொந்த ஊரான சேரன்மகாதேவிக்கு வந்தார். இந்த நிலையில், காலையில் வழக்கம் போல் வீட்டில் இருந்து பைக்கில் அவரது தந்தையின் நெல் வயலுக்குச் சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் வயலில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டிருக்கிறார்.
சேரன்மகாதேவியில் உள்ள கமிட்டி நடுநிலைப்பள்ளி அருகில் வந்து கொண்டிருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த விவசாயியான மாயாண்டி என்பவர் வழிமறித்து அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை, அவரது உறவினர்கள் மீட்டு சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து சேரன்மாதேவி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பழிக்குப்பழியாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோடராங்குளத்தில் சிவராமன் என்ற இளைஞர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையில் மணிகண்டனின் நெருங்கிய உறவினர் ஒருவருக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சிவராமனின் கொலைக்குப் பழிக்குப்பழியாக மணிகண்டனை, சிவராமனின் தாய்மாமா மாயாண்டி கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. தப்பி ஓடிய மாயாண்டியை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த கொலைச் சம்பவத்தால் சேரன்மாதேவி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.