Robin Uthappa: ரூ. 23 லட்சம் PF மோசடி... உத்தப்பாவிற்குக் கைது வாரண்ட்; பின்னணி ...
வனத்துறை கட்டுப்பாட்டுப் பகுதியில் கஞ்சா சாகுபடி; ரகசிய ஆய்வில் அதிர்ச்சி; அதிகாரிகளுக்குத் தொடர்பா?
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்ததையடுத்து, கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையைத் தடுப்பதில் அம்மாவட்ட காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த சூழலில் கல்வராயன் மலையில் உள்ள பெருமானத்தம் பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி ரஜத் சதுர்வேதிக்குத் தகவல் சென்றது. அதையடுத்து தனிப்படை காவல்துறையை அழைத்த எஸ்.பி ரஜத் சதுர்வேதி, பெருமானந்தம் பகுதியில் ரகசியமாக ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
ரகசிய ஆய்வு
அப்படி ஆய்வு செய்தபோது, வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில், சுமார் அரை ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பதைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
சுமார் 100 கிலோ எடையுள்ள 1,600 கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தது குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தினர். அதையடுத்து சட்டவிரோதமாகக் கஞ்சாவைப் பயிரிட்டதாக பெருமானத்தம் பகுதியைச் சேர்ந்த பருவதம் மற்றும் கோவிந்தன் என்ற இருவரையும் கைது செய்ததுடன், பயிரிடப்பட்டிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்திலேயே கஞ்சா சாகுபடி செய்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்களின் சந்தேகம்
இதுகுறித்து கல்வராயன் மலைப் பகுதி மக்களிடம் பேசியபோது, ``சட்டவிரோதமாகக் கஞ்சா பயிர் செய்ததை எப்படியும் நியாயப்படுத்த முடியாது. அதைச் செய்தது யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து, தண்டனை கொடுக்க வேண்டும். அதேசமயம் அதன் பின்னணியையும் ஆய்வு செய்ய வேண்டும். பயிர்கள் வைப்பதற்காக எங்கள் விவசாய நிலத்தைச் சிறிதளவு சீரமைப்பு செய்தாலே மோப்பம் பிடித்து வந்து தடுத்து விடுகிறது வனத்துறை. அப்படி இருக்கும்போது வனத்துறையினருக்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய அளவில் அங்குக் கஞ்சாவைப் பயிர் செய்து விட முடியுமா என்பதில் சந்தேகம் இருக்கிறது.
கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் சின்ச்பூர் என்ற கிராமத்தில் 8 கஞ்சா செடிகளை வைத்திருந்த விவசாயியைக் கைது செய்த காவல்துறை, அதன் எடை 8 கிலோ என்றும், அப்போதைய மதிப்பு ரூ,1,24,000/- என்றனர். அப்படி இருக்கும்போது அரை ஏக்கரில் பயிரிடப்பட்ட 1,600 செடிகளின் எடை வெறும் 100 கிலோ தான் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் உண்மையான மதிப்பை வெளியிட்டு, கஞ்சா சாகுபடி செய்தவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் அடையாளப்படுத்த வேண்டும்” என்கின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...