ம.பி: `52 கிலோ தங்கம், ரூ. 10 கோடி ரொக்கம்' - காட்டில் கைவிடப்பட்ட காரிலிருந்து மீட்ட அதிகாரிகள்
மத்தியப்பிரதேசத்தில் காட்டுக்குள் கைவிடப்பட்டிருந்த காரிலிருந்து 52 கிலோ தங்கம் மற்றும் ரூ. 10 கோடி ரொக்கத்தை அதிகாரிகள் கைப்பற்றிய சம்பவம், பேசுபொருளாகியிருக்கிறது. முன்னதாக, ரதிபாத் பகுதியில் உள்ள மெண்டோரி காட்டில், போபால் காவல்துறை மற்றும் வருமான வரித்துறையினர் இணைந்து நடத்திய சோதனையில், காட்டுக்குள் இன்னோவா கார் ஒன்று கைவிடப்பட்டிருந்தது தெரியவந்திருக்கிறது.
பின்னர், அதிகாரிகள் காரை சோதனையிட்டதில், காருக்குள் இருந்த 52 கிலோ தங்கம் மற்றும் ரூ. 10 கோடி ரொக்கம் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியைத் தந்தது. தங்கத்தின் மதிப்பு மட்டும் ரூ, 42 கோடி. காருக்குள் இவ்வளவு தங்கம் மற்றும் பணத்தை யார் வைத்துச் சென்றது யார் என்று தெரியாததால், போலீஸாரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் இதுபற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விசாரணைக்குப் பின்னரே, கைப்பற்றப்பட்ட கார், தங்கம், பணம் ஆகியவை யாருக்குச் சொந்தமானது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்பது தெரியவரும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மறுபக்கம், அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட தங்கம், பணம் ஆகியவற்றின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...