Sachin: ``உங்களைப் போலவே பந்துவீசுகிறார் ஜாகீர்!" - டெண்டுல்கர் ஷேர் செய்த சிறுமியின் வைரல் வீடியோ
இந்திய கிரிக்கெட் கண்ட தலைசிறந்த இடதுகை வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான். எந்த அளவுக்கென்றால், கடைசியாக 2014-ல் நியூசிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியோடு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஜாகீர் முழுக்கு போட்டு ஒரு தசாப்தமே ஆகிவிட்டது. ஆனாலும், இந்திய அணியில் இடது வேகப் பந்துவீச்சாளரின் இடம் நிரப்பப்படாமல் இருக்கிறது. ஜாகீர் கான் கரியரில் அவருக்கு மட்டுமல்லாது இந்திய அணிக்கும் மிக முக்கியமான தருணம் 2011-ல் 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை வென்றது.
அதில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கெதிரான இறுதிப் போட்டியில், 10 ஓவர்கள் வீசி 3 மெய்டன் ஓவர்களுடன் 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார். அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவரும் இவர்தான் (21 விக்கெட்டுகள்). இப்படியான இடதுகை வேகப் பந்துவீச்சாளருக்கான இந்திய அணியின் தேடல் இன்றும் தொடர்ந்தபடியே இருக்கிறது.
இடையில், கலீல் அகமது, ஜெயதேவ் உனாத்கட் போன்றோர் அணியில் இடம்பிடித்தும் அதைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், சிறுமி ஒருவர் அச்சு அசலாக ஜாகீர் கானைப் போலவே பந்துவீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கும் மேலாக, இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அந்த வீடியோவை தனது முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் ஆகிய சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்.
மேலும், அந்த வீடியோவில் `Smooth, effortless, and lovely to watch! சுஷீலா மீனாவின் பந்துவீச்சு உங்களைப் போலவே இருக்கிறது ஜாகீர் கான். நீங்களும் இதைப் பார்க்கிறீர்களா" என்று குறிப்பிட்டிருக்கிறார். சச்சின் ஷேர் செய்த பிறகு இந்த வீடியோ இன்னும் வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...