Sachin: ``உங்களைப் போலவே பந்துவீசுகிறார் ஜாகீர்!" - டெண்டுல்கர் ஷேர் செய்த சிறும...
Ashwin: "நான் இருந்திருந்தால்..." - அஷ்வின் ஒய்வு குறித்து கபில் தேவ் ப்ளீச்
இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாக இருப்பது ரவிச்சந்திரன் அஷ்வினின் திடீர் ஓய்வுதான். அதுவும் நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் பிளெயிங் லெவனில் கூட இடம்பெறாத மூன்றாவது போட்டியின்போது யாருமே எதிர்பாராத நேரத்தில், "அணிக்கு நான் தேவையில்லையெனில் ஓய்வு பெறுகிறேன்" என்று கூறி, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மெட்டுகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். இதனால், இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் ஜாம்பவான்களுமே தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எழும் விமர்சனங்கள்
அதில், கவாஸ்கர் உள்ளிட்ட ஒரு சிலர், "தோனி மாதிரி இவ்வாறு தொடரின் பாதியில் ஓய்வை அறிவித்திருக்கக்கூடாது" என்று கூறிவருகின்றனர். மறுபக்கம், இந்தியாவுக்காக அனைத்து ஃபார்மெட்டுகளிலும் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்கு (499 இன்னிங்ஸ்களில் 953 விக்கெட்டுகள்) அடுத்த இடத்தில் இருக்கும் லெஜெண்ட் அஷ்வினுக்கு (379 இன்னிங்ஸ்களில் 765 விக்கெட்டுகள்) முறையான ஃபேர்வெல் மேட்ச் கூட அளிக்காதது தவறு எனக் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், "நான் இருந்திருந்தால் அஷ்வினை இப்படி ஓய்வு பெற அனுமதித்திருக்க மாட்டேன்" என இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியிருக்கிறார்.
சொந்த மண்ணில் ஓய்வை...
நிகழ்ச்சியொன்றில் இதனைத் தெரிவித்திருக்கும் கபில் தேவ், "இந்தியாவின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் இப்படி வெளியேற முடிவு செய்தது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அஷ்வின் முகத்தில் சோகத்தின் சாயலை நான் கண்டேன். அவர் மகிழ்ச்சியற்றவராக இருந்தார். ஒரு சிறந்த விடைபெறலுக்கு அவர் தகுதியானவர். சொந்த மண்ணில் தனது ஓய்வை அறிவிக்க அவர் காத்திருந்திருக்கலாம். இப்போதே ஏன் முடிவெடுத்தார் என்று தெரியவில்லை. அவர் தரப்பு காரணத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.
மாபெரும் மேட்ச் வின்னர்
நாட்டுக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடியிருக்கிறார். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை யாரும் தொட முடியாது. அவருக்கான மரியாதையைக் கொடுக்க வேண்டும். நான் இருந்திருந்தால் அவரை இவ்வாறு ஓய்வு பெற அனுமதித்திருக்க மாட்டேன். அவருக்கு உரிய மரியாதையை நான் கொடுத்திருப்பேன். இந்தியாவின் மாபெரும் மேட்ச் வின்னருக்கு ஒரு பெரிய பிரியாவிடையை பி.சி.சி.ஐ திட்டமிடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...