Virat Kohli: `விராட் விரைவில் குடும்பத்துடன் இந்தியாவை விட்டு...' - கோலியின் முன்னாள் பயிற்சியாளர்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சமீபகால ஆட்டங்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு அந்த ஃபார்மெட்டில் மட்டும் ஒய்வை அறிவித்தார் விராட் கோலி. அதன்பின், 27 வருடங்களுக்குப் பிறகு இலங்கையிடம் ஒருநாள் தொடரை இழந்தது, நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை இழந்தது போன்ற வரலாற்றுத் தோல்விகளில் சீனியர் வீரர் என்ற முறையில் கடும் விமர்சனத்துக்குள்ளானார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் மூன்று டெஸ்ட்டுகளில் ஒரேயொரு இன்னிங்ஸில் சதமடித்ததைத் தவிர பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை.
டெஸ்ட் போட்டிகளில் கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே விராட் சொதப்பி வருவதால் அணியில் இளம் வீரர்களுக்கு வழிவிடட்டும் என்று பலரும் கூறத் தொடங்கிவிட்டனர். அதேசமயம், `விராட் கோலி ஒரு லெஜெண்ட். மீண்டு வருவது எப்படியென்று அவருக்குத் தெரியும்.' என்றும் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விராட் கோலி விரைவில் இந்தியாவை விட்டு வெளியேறி குடும்பத்துடன் லண்டனில் செட்டில் ஆகப்போவதாக அவரின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா பெரிய குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.
டைனிக் ஜாக்ரன் ஊடகத்திடம் இதனைத் தெரிவித்திருக்கும் ராஜ்குமார் சர்மா, ``ஆம், விராட் தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் குழந்தைகளுடன் லண்டனுக்குச் செல்ல திட்டமிட்டிருக்கிறார். விரைவில் அவர் இந்தியாவை விட்டு வெளியேறப் போகிறார். கிரிக்கெட்டைத் தவிர்த்து, விராட் தற்போது பெரும்பாலான நேரத்தைக் குடும்பத்துடன் செலவிடுகிறார்." என்று கூறியிருக்கிறார்.
மேலும், வீட்டின் ஃபார்ம் தொடர்பாக எழும் பேச்சுகள் குறித்து, ``விராட்டின் ஃபார்ம் கவலைக்குரிய விஷயம் அல்ல. கடினமான சூழ்நிலைகளில் எப்படி பேட்டிங் செய்வது, அணியை வெற்றி பெறச் செய்வது என்பது அவருக்குத் தெரியும். விராட் இன்னும் உடற்தகுதியுடன் இருக்கிறார். ஓய்வு பெறுவதற்கு அவ்வளவு வயதாகவில்லை. அவர் இன்னும் ஐந்தாண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் என்று நான் நம்புகிறேன்.
2027 உலகக் கோப்பையிலும் அவர் விளையாடுவார். எனக்கும் அவருக்கும் நல்ல உறவு இருக்கிறது. அவரின் 10 வயதுக்கு முன்பிருந்தே அவரை எனக்கு நன்றாகத் தெரியும். 26 வருடங்களாக அவருடன் தொடர்பில் இருக்கிறேன். அதனால்தான் என்னால் இவ்வாறு சொல்ல முடிகிறது." என்று ராஜ்குமார் சர்மா தெரிவித்தார்.
சமீப காலங்களில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனில் நேரம் செலவிட்ட விராட் கோலிக்கு இங்கிலாந்தில் சொத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...